By Village Missionary Movement
Wednesday, 30-Jun-2021இன்றைய தியானம்(Tamil) 30-06-2021
கீழ்ப்படிதல் எனும் நற்குணம்
“அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ அதின்படி செய்யுங்கள் என்றாள்.” – யோவான் 2:5
இரண்டாம் உலகயுத்தத்தில் பங்கெடுத்துப் பிழைத்தவர்களிடம் ஒரு பேட்டி எடுக்கப்பட்டது. அதில் இராணுவவீரர்கள் தாங்கள் ஒரு குறிப்பிட்ட நாளை எப்படி செலவழித்தோம் என்பதை நினைவுபடுத்திக் கூறினார்கள். ஒருவர் நரிக்குழி எனப்படும் பதுங்கு குழியில் நாள் முழுவதும் வெளியே வராமல் பதுங்கியே இருந்தார். அப்பக்கமாக வரும் ஜெர்மானிய டாங்குகளை ஓரிரு முறை சுட்டார். வேறு சிலர் சீட்டு விளையாடி நேரத்தைப் போக்கினர். இன்னும் சிலர் தீவிரமாக எதிரியோடு துப்பாக்கிச் சண்டை நடத்திக் கொண்டிருந்தனர். அவரவருக்கு கமாண்டர் கொடுத்த கட்டளைகளுக்கு அப்படியே கீழ்ப்படிந்தனர். பொதுவாக அந்த நாள் மற்ற நாட்களைப் போலவே கழிந்தது. பின்னரே அவர்கள் தாங்கள் உலக யுத்தத்தின் போக்கையே மாற்றின “பல்ஜ் போரில்” ஈடுபட்டிருந்ததை அறிந்தனர். அந்த நாளில் அவர்கள் செய்ததொன்றும் அவர்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. ஏனென்றால் நடக்கும் முழு யுத்தத்தைப் பற்றியும் அறியாதிருந்தார்கள். தன்னை வழிநடத்தினவரின் கட்டளைகளுக்கு மாத்திரம் கீழ்ப்படிந்து காரியங்களை செய்தார்கள். பெரிய வெற்றியை சுதந்தரித்தார்கள். இதன் மூலம் நாம் நம்முடைய கடமையைச் செய்யும்போது பெரிய வெற்றியைப் பெற முடியும் என அறிகிறோம்.
இன்றைய வேத பகுதியில், மோவாபியப் பெண்ணாகிய ரூத்தைப் பற்றி வாசிக்கிறோம். கணவனை இழந்து விதவையாய் உள்ள ரூத்துக்கு அவர் மாமி நகோமி சொன்ன காரியம் ஏற்புடையதாய் இருக்கவில்லை. இருப்பினும் ரூத்தோ நகோமியின் சொல்லுக்கு அப்படியே கீழ்ப்படிகிறாள். நீர் எனக்குச் சொன்னபடியெல்லாம் செய்வேன் என்கிறாள் (ரூத் 3:5). ரூத்தின் கீழ்ப்படிதலுக்கு கிடைத்த பலன் இவளுடைய சந்ததியில் தாவீதும், உலக இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவும் பிறந்தார்கள்.
கீழ்ப்படிதலை விலையேறப்பெற்ற அலங்காரம் என பேதுரு தன் நிருபத்தில் வருணிக்கிறார். கீழ்ப்படிதலை அணிந்து கொள்ளுங்கள் எனவும் நமக்கு அறிவுறுத்துகிறார் (1பேதுரு 3:1-5) ஆனால் என்னவோ ஒருவருக்கொருவர் கீழ்ப்படிவது என்பது அநேகருக்கு மிகவும் கசப்பாகவே காணப்படுகின்றது. யுத்த களத்தில் இராணுவ வீரனுக்கு கீழ்ப்படிதல் எவ்வளவு முக்கியமோ, அதுபோல கிறிஸ்தவ வாழ்க்கை எனும் ஆவிக்குரிய யுத்தத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் கீழ்ப்படிதல் மிகவும் அவசியமாய் இருக்கிறது. இப்படி கீழ்ப்படிதல் எனும் பண்புக்குள் வரும்போது உங்களுக்கு சலிப்பாக இருக்கலாம். அல்லது நீங்கள் மிக சோர்வடையலாம். ஆனாலும் கீழ்ப்படிதலை அமைதியாய் கைக்கொள்ளும்போது முடிவு ஆசீர்வாதமாய் இருக்கும்.
- P. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
ஊழியத்தில் பயன்படுத்தப்படும் நான்கு சக்கர வாகனங்கள் பழுதின்றி செயல்பட, ஓட்டும்போது தேவ பாதுகாப்பு காணப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250