By Village Missionary Movement
Friday, 19-Jun-2026இன்றைய தியானம்(Tamil) 19.06.2026
ஆசீர்வாதமா? எச்சரிப்பா?
“...நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி,…” - 2 பேதுரு 2:5
இன்று உலகம் முழுவதும் பல பரிமாணங்களில் கர்த்தருடைய வார்த்தைகள் பிரசங்கிக்கப்படுகின்றன. மனந்திரும்புதலைக் குறித்த எச்சரிப்பின் வார்த்தைகளைக் கேட்பதை விட, செழுமையான வாழ்வைக் குறித்த ஆசீர்வாதமான வார்த்தைகளையே அநேகர் விரும்பி கேட்கின்றனர். “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்” (மத். 24:37) என இயேசு கிறிஸ்து கூறினார். நோவா, தேவசத்தம் கேட்டு அவர் சித்தம் செய்த மனிதர். அவர் நீதியைக்குறித்து பிரசங்கித்தார். ஜலப்பிரளயத்தால் தேவன் உலகத்தை அழிக்கப் போகும் எச்சரிப்பின் செய்தியை கூறியும் மக்கள் யாருமே கேட்கவில்லை, அதனால் அழிக்கப்பட்டனர். நோவா அக்கிரமம் நிறைந்த மக்கள் நடுவே உத்தமமாய் வாழ்ந்து தேவ எச்சரிப்புக்கு செவி கொடுத்தார். ஆகவே குடும்பத்தோடு காக்கப்பட்டார். நினிவே மக்கள் தேவனின் எச்சரிப்பின் செய்தியைக் கேட்டுத் தங்களைத் தாழ்த்தி மனந்திரும்பினர். எனவே நினிவே மக்களை அழிக்காமல் கர்த்தர் காத்தார். பாவத்தில் வாழ்ந்த சோதோம், கொமோரா மக்கள் நடுவே நீதிமானாய் வாழ்ந்த லோத்துவை தேவன் குடும்பத்தோடு காத்தார். நாமும் ஆண்டவரின் எச்சரிப்பை ஏற்று நீதியையும், நியாயத்தீர்ப்பையும் குறித்த வார்த்தைகளுக்கு நேராய் நம் மனதைத் திருப்பி அதற்கு செவிகொடுத்து நடக்க வேண்டும். என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான் (எசே. 18:9) என வேதம் கூறுகிறது.
நோவாவின் காலத்தில் நடந்தது போலவே இன்றும் அநேகர் தேவனின் எச்சரிப்பை தள்ளி விட்டு அநியாயமாய் வாழ்ந்து கொண்டு வருகின்றனர். ஆனால், தேவனின் வருகையில் நாம் காக்கப்பட எச்சரிப்பின் வார்த்தைகளைக் கேட்டு மனந்திரும்பி, நோவாவைப் போல, லோத்துவைப் போல நினிவே மக்களைப் போல நீதியாய் வாழ்வோம். அழிவிலிருந்து காக்கப்பட்டு நித்திய ஜீவனைப் பெறுவோம். அதுவே நித்தியமான ஆசீர்வாதம்.
- Mrs. எப்சிபா ரவிச்சந்திரன்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864