Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 25-06-2021
Share:

By Village Missionary Movement

Friday, 25-Jun-2021

இன்றைய தியானம்(Tamil) 25-06-2021

 

“உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள்… செவ்வையாய்ப் பார்க்கக்கடவது.” – நீதிமொழிகள் 4:25

 

கண்ணே சரீரத்தின் விளக்காயிருக்கிறது. அப்படியென்றால் நம் கண் கெட்டதாய் மாறும்போது, நம் ஆவிக்குரிய வாழ்வையே அது இருளுக்குள் தள்ளிவிடும். இப்படி கண்ணினால் கண்ணியில் சிக்கிக்கொண்ட சிலரைக் குறித்து இன்று காண்போம். 

 

ஏவாள்: விலக்கப்பட்ட கனியைத் தவிர ஏதேன் தோட்டத்தில் எத்தனையோ விதவிதமான கனி மரங்கள் இருந்தன. ஆனால் சர்ப்பத்தின் வார்த்தைக்கு செவிசாய்த்த ஏவாள் தன் கண்ணை அதன் மீது வைத்தாள். பார்வைக்கு இன்பமாயிருந்த அக்கனியைப் பறித்து, புசித்து, புருஷனுக்கும் கொடுத்தாள். முடிவு குற்ற உணர்வு! அதன் மூலம் ஒளிந்துகொள்ளுதல், பிறர் மேல் பழிபோடும் பாவம், இறுதியில் சாபத்தோடு வெளியேற்றம். எத்தனை பரிதாபம்! இன்றைக்கும் இவ்வுலகில் தேவனால் விலக்கப்பட்ட அநேக காரியங்கள் உண்டு. அவற்றின் மீது நமது பார்வையை பதிப்போமானால் ஆதாம் ஏவாளைத் தொடர்ந்து பிடித்த பாவம் நம்மையும் தேவசமூகத்தை விட்டே தள்ளிவிடும். ஆகவே நீங்கள் பார்க்கும் காரியத்தில் கவனமாயிருங்கள்.

 

தாவீது: தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவன்தான். ஆனால் உரியாவின் மனைவியினுடைய அழகின் மீது பார்வையை பறக்கவிட்டபோது கண்ணின் மூலமாய் ஆசை நுழைந்து, தேவனுக்காக திறந்திருந்த அவரது இருதயக்கதவை இழுத்து மூடி, துணிகர பாவம் செய்ய தூண்டியது. இறுதியில் தீர்க்கதரிசியாகிய நாத்தான் வந்து, அவரது துணிகரத்தை சொல்லும்வரை, அவரது உள்ளம் உணர்வடையவுமில்லை, உடைக்கப்படவுமில்லை. ஆம், நாமும் நம் கண்ணினால் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்போம். “பார்வையில் பரிசுத்தம்” நம் சொத்தாய் மாறட்டும்.

 

சிம்சோன்: தாயின் கருவிலேயே தெரிந்துகொள்ளப்பட்டவன். இஸ்ரவேலருக்கு இரட்சகனாக, நியாயாதிபதியாக அழைக்கப்பட்டவன். தேவதிட்டத்திற்கு நேராய் ஓடினவன். இடையில் திம்னாத்திலே ஒரு பெண்ணைக் “கண்டு” (நியா.14:1) வேசியை “கண்டு” (16:1) பாவத்தில் விழுகிறான். அந்த நொடியிலிருந்து அவனது தரிசனம் முற்றிலும் மாறியது. கண்களின் இச்சையில் விழுந்த சிம்சோன் கண்கள் பிடுங்கப்பட்டவனாய் மாவரைக்கும் நிலைக்கும், சிறுமையானவர்களுக்கு வேடிக்கை காட்டும் நிலைக்கும் தள்ளப்பட்டான். ஆளுகை செய்த கை இப்போது ஆட்டுக்கல்லைச் சுற்றிக்கொண்டிருந்தது. காரணம், கண்ணை கட்டுப்படுத்தாத பாவம்! 

 

இதை வாசிக்கும் நண்பரே! உங்களின் பார்வை எப்படிப்பட்டது? பார்வையில் பரிசுத்தம் உண்டா?

- Mrs. ரூத் அனீஸ்

 

ஜெபக்குறிப்பு:

கடைசி கால எழுப்புதலுக்கான ஆயுதங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நம் ஊழியர்களை தேவன் இன்னும் உருவாக்கி பயன்படுத்த ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al