By Village Missionary Movement
Thursday, 24-Jun-2021இன்றைய தியானம்(Tamil) 24-06-2021
“அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.” – சங்கீதம் 143: 8
அதிகாலை...அதிக இருட்டு.... இந்த நேரம் ஆண்டவரோடு ஐக்கியப்பட ஒரு அற்புதமான நேரம். மனிதர் முகம் காணும் முன்பு, ஆண்டவரின் பிரசன்னத்தை நாடி, அன்றைக்குரிய தேவத்திட்டத்தை அறியவும், தேவ கிருபையை பெற்றுக்கொள்ளவும் காத்திருக்கும் அவ்வேளைதான் ஜெயமெடுக்கும் நேரம். உண்மையாகவே ஒவ்வொரு கிறிஸ்தவனின் வாழ்விலும் இது இருக்குமென்றால் நிச்சயமாகவே அவன் உலகத்தை ஜெயித்து விடுவான்.
நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவும் அதிகாலையில் எழுந்து பிதாவின் சமூகத்திற்கு சென்றார். பிதாவின் சித்தத்தையும் திட்டத்தையும் அறிந்து கொண்டார். அதன்படியே அற்புத அடையாளங்களைச் செய்து பிசாசானவனையும் இலகுவாய் வென்றார். மேலும் வேதத்திலுள்ள பரிசுத்தவான்கள் சத்துருவை சங்கரிக்கவும், தேசங்களை சுதந்தரிக்கவும் அதிகாலமே எழும்பிச் சென்றதை வாசிக்கிறோம்.
குறிப்பாக யோசபாத் என்னும் யூதாவின் ராஜாவுக்கு விரோதமாய் யுத்தம் பண்ண வந்த மோவாப், அம்மோன் என்ற ஜாதிகளைக் கண்டபோது அவர் மிகவும் கலங்கினார். இருப்பினும் ராஜாவும் ஜனங்களும் தங்கள் கண்களையும் கைகளையும் தேவனுக்கு நேராக ஏறெடுத்து தங்களை தாழ்த்தி விண்ணப்பம் பண்ணினார்கள். தேவன் “பயப்படாமல் இருங்கள் இந்த யுத்தம் உங்களுடையதல்ல, என்னுடையது” என்றார். நடந்தது என்ன? அவர்கள் சத்துருவை சங்கரிக்கும்படி அதிகாலமே எழுந்தனர். தேவனை துதித்துப் பாடும் பாடற்குழுவினரை வீரர்களுக்கு முன்பாக நிறுத்தினார். துதி செய்யத் தொடங்கினபோது எதிரிகள் தங்களுக்குள் வெட்டுண்டு விழுந்தனர். ஆ! எத்தனை பெரிய வெற்றி முழக்கம்.
பிரியமானவர்களே! எதிரியான பிசாசு உங்களை பயமுறுத்திக் கொண்டேயிருக்கிறானா? உன்னை அழித்து விடுவேன் என்று சவால் விட்டுக் கொண்டிருக்கிறானா? அல்லது மனிதர்கள் உங்களுக்கு எதிராய் எழும்பியிருக்கிறார்களா? கலங்காதீர்கள். தேவன் நமக்கு துணையாய் நிற்க நமக்கு கலக்கம் ஏன்? யுத்தம் கர்த்தருடையதல்லவா? நாம் செய்ய வேண்டியதெல்லாம் அதிகாலமே எழுந்து, தேவசமுகத்தில் வந்து நிற்க வேண்டும். ஆம், அதிகாலை ஜெபம் அத்தியாவசியமானது. அதிக இருட்டு, அதிக மகிமை. அதிகாலை ஜெபம் வெற்றியைக் கொண்டுவரும். அதிகாலையில் காத்திருக்கும் அனுபவத்தை அப்பியாசப்படுத்தி வெற்றி வீரர்களாய் வாழுங்கள்.
- S. மனோஜ்குமார்
ஜெபக்குறிப்பு:
தின தியானச் செய்தியை வாசித்து பயன்பெறுவோர் அந்த சத்தியத்தின்படி நடக்க, சாட்சியாய் வாழ ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250