By Village Missionary Movement
Wednesday, 03-Jun-2026இன்றைய தியானம்(Tamil) 03.06.2026
இயேசுவை தொலைத்து விட்டீர்களா?
“..கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்” - நியா. 16:20
உங்களுக்கு ஒன்று தெரியுமா ஒரு கன்னிகை, தாய் ஆனாள். தேவனால் முன்குறிக்கப்பட்ட பெண் அவள், தேவ தூதனே அந்த செய்தியை அவளுக்கு சொன்னார், பரிசுத்த ஆவியின் நிறைவினால் அக்குழந்தையை பெற்றெடுத்தாள். அக்குழந்தையை ஏழை எளியவர், வசதி படைத்தவர் என பலர் வந்து பார்த்து, பணிந்து, பரிசளித்து சென்றனர். அந்தக் குழந்தையைக் குறித்து சொல்லப்பட்ட பல தீர்க்கதரிசனங்களை கேட்டு வியந்து, நடந்த எல்லாவற்றையும் மனதில் வைத்து அக்குழந்தையை வளர்த்து வந்தார்கள். ஆனால் பண்டிகைக்கு வந்த பெற்றோர், பண்டிகை கொண்டாட்டத்தில் பிள்ளையை தொலைத்துவிட்டு, வீட்டிற்கு பிரயாணப்படுகிறவர்களின் கூட்டத்தோடு தேடினார்கள். அந்த பெண் வேறுயாருமல்ல இயேசுவின் தாயாகிய மரியாள்தான்.
இதே போல் பழைய ஏற்பாட்டில் சிம்சோன் என்ற மனிதர் இருந்தார். சிம்சோன் கர்த்தரின் ஆவியானவரால் அசாதாரணமான காரியங்களை செய்தார். ஆனால் உலக இன்பங்கள், ஆசை, இச்சையில் ஈடுபட்டதால் கர்த்தர் தன்னை விட்டு விலகினதை அறியாமல் இருந்தார். பிலாத்து இயேசு குற்றம் செய்யாதவர் என அறிந்திருந்தும், மக்களுக்காக கை கழுவி விடுகிறார். இன்றும் கர்த்தரை அறிந்த கிறிஸ்தவர்கள் என சொல்லுகிற பலர் பண்டிகை கொண்டாட்டங்கள், ஸ்தோத்திர பண்டிகை, அறுப்பின் பண்டிகை என பல பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள். ஆனால் இயேசுவை தொலைத்து விட்டு இயேசு இல்லாமல் கொண்டாடுகிறார்கள். மேலும் உலக காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டு, இயேசு கிறிஸ்து அவர்களை விட்டு விலகியதை அறியாமல், முன்பு செய்து வந்தபடியே செய்து வருவார்கள். ஆனால் அதில் ஆசீர்வாதம் இல்லாததைக் கண்டு மனவேதனை அடைவார்கள். நண்பர்கள், இனத்தார், சமுதாயம் என மனிதர்கள் பார்க்கும்படி ஜெபிப்பது, வேதம் வாசிப்பது என தேவனுக்கு பிரியமாய் வாழ்வதை விட்டு விடுகிறார்கள்.
பிரியமானவர்களே, நீங்களும் மரியாளைப் போல், சிம்சோனைப் போல், பிலாத்துவைப் போல் இருக்கிறீர்களோ? யோசித்துப் பாருங்கள். இயேசுவைத் தொலைத்தாலும் இன்று மனந்திரும்பி அவரைத் தேடி வரும் போது, பெரிய ஆசீர்வாதத்தை தர அவர் வல்லவர். மரியாள் தேடி வந்த போது இயேசுவைக் கண்டதோடு அவர் ஞானத்தைப் பார்த்து வியந்தார்கள். சிம்சோன் கர்த்தர் தன்னோடு இல்லாததை உணர்ந்து, இந்த ஒரு விசை மாத்திரம் நினைத்தருளும் என மனந்திரும்பி கெஞ்சிய போது கர்த்தர் பலப்படுத்தினார். சிம்சோன் சாகும் போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள். வல்லமை பலமாய் இறங்கியது. நீங்கள் கர்த்தரைத் தொலைத்திருந்தால் இன்றே மனந்திரும்புங்கள். நான் சொல்வது ஒன்று தான். எதற்காகவும் இயேசுவை இழக்காதீர்கள். இயேசுவுக்காக எதையும் இழக்க ஆயத்தமாயிருங்கள். கிறிஸ்துவுக்காக இழந்தவர்கள் தரித்திரர் ஆனதில்லை.
- Bro. டேவிட் கணேசன்
ஜெபக்குறிப்பு:-
Day Care Centre ல் உள்ள பிள்ளைகளின் கல்வி தேவைகளுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864