By Village Missionary Movement
Wednesday, 23-Jun-2021இன்றைய தியானம்(Tamil) 23-06-2021
“கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து... தன் செட்டைகளின்மேல் சுமந்து கொண்டுபோகிறது...” – உபாகமம் 32:11
பயங்கரமான செங்குத்தான மலை உச்சியில் கட்டப்பட்ட கழுகுக் கூட்டில் இரண்டு கழுகு குஞ்சுகள் ஒடுங்கி முடங்கி கிடந்தன. தாய்க்கழுகு குஞ்சுகளுக்குத் தேவையான இறைச்சிகளை அங்குமிங்குமாக பறந்து கொண்டு வந்து கொடுத்த வண்ணமாயிருந்தது. குளிரான இராத்திரி வேளையில் தாய் தனது குஞ்சுகளின் மேல் தன் இறக்கையை விரித்து அணைத்துக் கொண்டது. தாயின் வெதுவெதுப்பான உடலும், பஞ்சுபோன்ற இறக்கைகளும் குஞ்சுகளுக்கு இதமளித்தன. இந்த கழுகுக் குஞ்சுகளைப் போலத்தான் புதிதாய் மறுபடியும் பிறந்த தேவபிள்ளைகளும் இருக்கிறோம். “கிறிஸ்தவனாயிருந்தால் பிரச்சனைகளே இனி இராது” என்று எண்ணுகிறோம்.
ஒருநாள் தாய்க்கழுகு தனது வலிமையான நீண்ட இறக்கைகளை விரித்து பறந்து வந்து வித்தியாசமாக செயல்பட ஆரம்பித்தது. எப்போதும் அமைதியாக கூட்டில் வந்து அமரும். ஆனால் அன்று கூட்டின் ஒவ்வொரு பகுதியாக பிய்த்து தன் அலகால் கொத்தி கீழே போட்டது. திரும்பத் திரும்ப அதே செயலை செய்தது. தாங்கள் இதுவரை பாதுகாப்பாய் இருந்த கூட்டில் கொஞ்சம் மாத்திரமே மீதமிருந்தன. அதில் உட்கார்ந்திருந்த குஞ்சுகள் கீழே பாதாளத்தைக் கண்டு நடுங்கின. குஞ்சுகளில் ஒன்றை கூட்டிலிருந்த ஆழ்ந்த பள்ளத்தை நோக்கி தள்ளிற்று. இதை சற்றும் எதிர்பாராத கழுகுக் குஞ்சு “இன்றோடு செத்தோம்” என்று திகிலுடன் கீழே விழுந்து கொண்டிருக்கையில் நொடிப்பொழுதில் தாய் பறந்து வந்து அதனை தன் முதுகில் ஏந்திக் கொண்டது. மீண்டும் அதை மலை உச்சிக்கு கொண்டு வந்து திரும்பவும் கீழே போட்டு, இவ்விதமாக அதனை மேக மண்டலங்களுக்கு மேலே பறந்து செல்லக்கூடிய வலிமையான கழுகாக மாற பயிற்சி கொடுத்தது.
பிரியமானவர்களே! கிறிஸ்துவுக்குள்ளாக நம்மைத் தேறினவர்களாக நிறுத்துவதற்கு தேவன் கையாளும் முறையும் இதுவேதான். நமது வாழ்வை தாக்கும் கொடிய பிரச்சனைகளைக் கண்டு கழுகுக் குஞ்சுகளைப்போல கீச்சிட்டு கத்துகிறோம். ஆனால் உங்களை அதிகமாய் நேசிக்கிற தேவன்தான் உங்கள் கூட்டைக் கலைக்கிறார். ஆவிக்குரிய மேலான அனுபவங்களை நாம் கற்று உன்னதங்களுக்கு நேராக செட்டைகளை அடித்து பறந்து செல்லவே தேவன் விரும்புகிறார்.
தேவன் உங்களுக்கு தற்போது பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறாரா? இன்னும் கொஞ்ச காலத்தில் நீங்கள் தேறினவர்களாய், எந்த நற்கிரியைகளையும் செய்ய தகுதியுள்ள பாத்திரமாய் மாறிவிடுவீர்கள். அல்லேலூயா!
- Mrs. தவமணி வைரவேல்
ஜெபக்குறிப்பு:
இவ்வூழியத்தை ஜெபத்தால் தாங்குகின்ற பங்காளர்களை தேவன் இன்னும் ஜெப ஆவியினாலும், விண்ணப்பத்தின் ஆவியினாலும் நிரப்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250