By Village Missionary Movement
Friday, 15-May-2026இன்றைய தியானம்(Tamil) 15.05.2026
சுவிசேஷம் சொல்லத் தயங்காதே
“கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்;..” - ரோமர் 1:16
பிரேசில் நாட்டில் கார்லோஸ் என்பவர் மாடாகிராசோ என்ற ஒரு ஊருக்குச் செல்ல லாரியில் பயணப்பட்டார். லாரி ஓட்டுநர் கார்லோஸிடம் பேசுவதற்கு எவ்வளவோ முயன்றும் அவர் மௌனமாகவே இருந்து விடைபெற்றுச் செல்ல முற்பட்டார். ஆனால் லாரி ஓட்டுநரோ கார்லோஸ் இறங்கும் போது அவரிடம் ஒரு சிறிய புதிய ஏற்பாட்டை கொடுத்து, உங்களுக்கு சமயம் வாய்க்கும் போது தயவு செய்து இதை வாசியுங்கள் என்றார். வேண்டா வெறுப்பாக அதை வாங்கிக் கொண்ட கார்லோஸ் யோசித்தவாறே நடந்து சென்றார்.
அநேக மாதங்கள் கழித்து ஒரு நாள் அந்த லாரி ஒட்டுநர் ஆலயத்திற்குச் சென்ற பொழுது அங்கே கார்லோஸைப் பார்க்க நேரிட்டது. அவரிடம் உங்களுக்கு என்னை தெரியுமா? என்று லாரி ஓட்டுநர் கேட்டார். அதற்கு கார்லோஸ், தெரியுமாவா? நீர் எனக்குக் கொடுத்த புதிய ஏற்பாட்டை நான் பெற்றுக் கொண்ட அன்று, ஒரு மனிதனைக் கொலை செய்யப் போய்க் கொண்டிருந்தேன். அப்போது என் சட்டையைப் பிடித்து இழுப்பது போன்று ஒரு உணர்வு ஏற்பட்டது. திரும்பிப் பார்த்தால் ஒருவரையும் காணோம். திகைத்தவனாய் அங்கேயே உட்கார்ந்த நான் சிறிது நேரம் கழித்து நீர் கொடுத்த புதிய ஏற்பாட்டைத் திறந்து வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க, வாசிக்க அம்மனிதனைக் கொல்லக் கூடாது என்ற எண்ணமே என் முடிவாக இருந்தது. இப்போழுது ஒரு மனந்திரும்பிய மனிதனாக இருக்கிறேன் என்று மகிழ்வுடன் கூறினார்.
அன்பான தேவ பிள்ளைகளே! அந்த லாரி ஓட்டுநர் கொடுத்த புதிய ஏற்பாட்டால் இரண்டு உயிர்கள் அன்று காப்பாற்றப்பட்டன. ஒரு வேளை லாரி ஓட்டுநர் கொடுக்கத் தயங்கி இருப்பாரென்றால் ஒருவர் கொலையாளியாய் மாறியிருப்பார், மற்றொருவர் கொலை செய்யப்பட்டிருப்பார். ஆனால் இப்பொழுது ஒருவர் இயேசு கிறிஸ்துவில் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்டார். மற்றொருவர் உலகத்தில் வாழ ஜீவனைப் பெற்றுக்கொண்டார். நாமும் கூட சுவிசேஷம் சொல்ல ஒரு நாளும் வெட்கப்படக்கூடாது. இது நம்முடைய வேலை. நம் வேலையை நாம் சரியாகச் செய்தால் கர்த்தரும் அவர் கிரியையைச் செய்து முடிப்பார். அதைத் தான் வேதம் சொல்கிறது அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும் (ஏசாயா 55:11). எனவே சுவிசேஷத்தை தயங்காமல் சொல்வோம். வழிதப்பித் திரிவோரை நல்வழியில் நடத்தி நித்திய ஜீவக்கரையில் சேர்ப்போம்.
- Mrs. செல்வா பெஞ்சமின்
ஜெபக்குறிப்பு:
VBS ஊழியத்திற்கென்று வாலிபர்கள் பலர் நம்மோடு இணைய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864