By Village Missionary Movement
Saturday, 09-May-2026இன்றைய தியானம்(Tamil) 09.05.2026
கர்த்தருக்கு சாட்சியாயிருப்போம்
“என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” - பிலிப்பியர் 4:13
ஒரு முறை தென்கொரியா நாட்டில் 144 தடைச்சட்டம் பிறப்பிக்கப்பட்ட போது, மக்கள் கூடுவதற்கு மிகவும் நெருக்கடியான சூழல் காணப்பட்டது. அங்குள்ள அதிகாரியினிடத்தில் சிலர் வந்து ஐயா, நாங்கள் மட்டும் எங்கள் சபைக்குச் சென்று தேவனை ஆராதிக்க எங்களுக்கு உத்தரவு தாருங்கள் என்று மன்றாடினார்கள். அதிகாரியோ சிறிது நேரம் யோசித்து விட்டு சரி, நீங்கள் ஆராதிக்கலாம் ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. சத்தமில்லாமல் ஆராதனை செய்யுங்கள் என்று கூறினார். இதைக் கேட்ட மக்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர். பின்னர் ஒரு சிலராக கூடி சர்வ வல்ல தேவனை கைகளைத் தட்டி ஆராதிக்க ஆரம்பித்தனர். அச்சத்தத்தைக் கேட்டவர்கள் ஆலயத்தை சுற்றிலும் நெருப்பை பற்ற வைத்தனர். ஆனால் நடந்தது என்ன தெரியுமா? சிறிதும் பதற்றம் இல்லாமல் அவர்கள் தேவனை இன்னும் சத்தமாக ஆராதித்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் எல்லாரும் கர்த்தருக்கு சாட்சியாக மரித்துப் போனார்கள். இன்றும் ‘தென்கொரியா’ கிறிஸ்தவர்கள் அநேகர் இருக்கும் நாடாகத்தான் உள்ளது.
வேதத்தில் தேவனை ஆராதிக்க கூடாது என்ற நிபந்தனையின் மத்தியிலும் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற மூன்று பேரையும் எரிகிற அக்கினிச் சூளையின் நடுவிலே போடப்பட்டனர். ஆனால் அவர்கள் தேவன் மீது நம்பிக்கையும், விசுவாசமும் வைத்ததினால் நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவினார்கள். நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருந்தது. அவர்கள் சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்தது. அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், தேவன் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார் என்று சாட்சி பகர்கிறார். தேவன் அவர்களை அக்கினி பற்றாமல் பாதுகாத்தார். இவர்களை அக்கினி சூளையில் தூக்கி போடுவித்த நபர் மீது அக்கினி பற்றியெரிந்தது. ஆனால், அக்கினியில் போடப்பட்ட நபர்கள் பாதுகாக்கப்பட்டனர்.
இவற்றையெல்லாம் வாசித்த நம்மால் ஏன் இயேசுவை பிறருக்கு அறிவிக்க முடியாது? கடந்த நாட்களில் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், இந்திய அணி வெற்றி பெற்றதும், மைதானத்திலே ஆயிரக்கணக்கான மக்கள் முன்பு இயேசுவுக்கு நன்றி கூறினார். அந்த வேளையில் online -ல் அதை பார்த்துக்கொண்டிருந்த ஜனங்களுக்கு, ‘இயேசுவால் ஒரு மனிதனை ஜெயிக்க வைக்க முடியும்’ என்பதை அதன் மூலம் சாட்சியாக தெரிவித்தார். ஆனால் நாம் எப்பொழுது இயேசுவின் அன்பை பிறருக்கு அறிவிக்கப் போகிறோம்? இப்பொழுதே தயாராகலாமே.
- Mrs. பூவிதா எபிநேசர்
ஜெபக்குறிப்பு:-
VBS புத்தகங்களை வாங்கி செல்லும் யாவரும் ஊழியம் செய்ய, தேவன் அவர்களை பயன்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864