By Village Missionary Movement
Wednesday, 06-May-2026இன்றைய தியானம்(Tamil) 06.05.2026
பொறுமை
“...பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்" - பிரசங்கி 7:8
நாம் எல்லோரும் நத்தையை பார்த்திருப்போம். இந்த நத்தை எவ்வளவு பொறுமையாக நடக்கிறது என்று என்றைக்காவது நாம் யோசித்தது உண்டா? எவ்வளவு பொறுமை பாருங்கள்! வேதத்தில், பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன். அன்பையும் பொறுமையையும் சாந்த குணத்தையும் அடையும்படி நாடு. உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களை காத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. நாம் ஒரு செயலை செய்ய முற்படும்போது பொறுமையாக இருக்கிறோமா அல்லது அவசரப்படுகிறவர்களாக இருக்கிறோமா? அப்படி நாம் அவசரப்படுகிறவர்களாக இருப்போமென்றால் இனிமேலாவது நம்மை மாற்றிக் கொள்ள முயற்சிப்போம். உங்களுடைய வாழ்க்கை பயணத்தில் ஒவ்வொரு காரியத்திலும் பொறுமையாக இருங்கள். முக்கியமாக ஒரு காரியத்தில் முடிவெடுக்க வேண்டிய தருணம் வரும்போது, பொறுமையாக முடிவெடுக்க வேண்டும். எந்த நிர்பந்தமான சூழ்நிலை வந்தாலும், நாம் அவசரப்படக்கூடாது. பொறுமையோடு அதை கையாள வேண்டும். பொறுமை ஆரோக்கியமான உறவுகளை வளர்க்க உதவுகிறது. வாழ்க்கையில் வெற்றி அடைய வழிவகுக்கிறது.
வேதம் சொல்கிறது உபத்திரவத்தில் பொறுமையை கற்றுக் கொள்ள வேண்டும். பொறுமை நமக்குள் வரும்போது என்ன ஆகும் தெரியுமா? உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது. நம் வாழ்க்கையை நம்பிக்கையோடு, பொறுமையோடு நடத்த வேண்டும். தாவீது ராஜாவை நாம் பார்ப்போமென்றால் அவர் உடனே எந்த முடிவையும் எடுக்க மாட்டார். கர்த்தர் சமுகத்தில் காத்திருந்து, அவருடைய ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு எந்த ஒரு காரியத்தையும் செய்வார். அப்படி அவர் செய்த காரியமெல்லாம் ஜெயமாக முடிந்தது.
அன்பானவர்களே, நீங்களும் கூட பொறுமையோடே தேவ சமுகத்தில் காத்திருந்து, உங்களுக்கான ஒவ்வொரு முடிவையும் எடுத்தால் அது உங்களுக்கு ஜெயமாகவும், ஆசீர்வாதமாகவும் இருக்கும். "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்." (ஏசாயா 40:31) பொறுமையோடு முன்னேறுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
- B. சுபாஷ்
ஜெபக்குறிப்பு:-
நம் தோழமை ஊழியர்கள் தெபோராள்கள் செய்யும் VBS ஊழியங்களை தேவன் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864