By Village Missionary Movement
Wednesday, 29-Apr-2026இன்றைய தியானம்(Tamil) 29.04.2026
அதிசயங்களின் தேவன்
"...எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.” - யோபு 9:10
மைக்கேல் ஏஞ்சலோ என்ற பிரபல சிற்பியும், அவரது நண்பரும் ஒரு மாலை நேரம் காட்டுப் பகுதியில் நடந்து சென்றனர். ஏஞ்சலோ ஒரு கற்பாறையை சுட்டிக் காட்டி, அதோ பார், அந்தப் பாறை தேவதூதன் போல இருக்கிறது என்றான். நண்பனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏஞ்சலோ, நண்பனை சற்றே இளைப்பாற அனுப்பிவிட்டு, உளியைக் கொண்டு அந்தப் பாறையில் வேலை செய்ய ஆரம்பித்தார். திறமைமிக்க அவரது கரங்கள் வேகமாக செயல்பட்டு அந்தக் கற்பாறையை உயிரோட்டமான ஒரு தேவதூதனின் சாயலாக மாற்றிவிட்டது. மறுநாள் மாலை அவர்கள் இருவரும் அதே காட்டுப் பகுதியில் நடந்து சென்ற போது, அந்த கற்பாறையில் தேவ தூதனின் உருவத்தை கண்டு பிரம்மித்துப் போனார் நண்பர். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கண்டுகொள்ளப்படாத ஒரு கற்பாறையிலிருந்து ஒரு அழகிய உருவத்தைக் கொண்டு வர ஒரு மனிதனால் முடியுமென்றால், வெறுமையிலிருந்து எல்லாவற்றையும் உருவாக்கிய தேவன், உங்கள் வாழ்க்கையையும் அப்படியே உருவாக்குவார், மெருகூட்டுவார் என்பது எவ்வளவு உண்மை! "அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்" என்று சங்கீதம் 113 : 7 ல் வாசிக்கிறோம். தேவனாகிய கர்த்தர் நமக்குச் செய்த அதிசயங்களை சொல்லி அறிவிக்க வேண்டுமானால், அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள். அவர் மாத்திரமே நம் தோல்விகளை ஜெயமாய் மாற்ற வல்லவர். பாவிகளை பரிசுத்தவான்களாக மாற்றுகிறவர். அவர் அற்புதங்களின் தேவன்.
இயேசுவுடன் இருந்த 12 சீஷர்களில் ஒருவர் பேதுரு. மீன் பிடிக்கும் தொழிலைச் செய்து வந்தவர், இயேசுவின் பின் சென்றார். ஒரு கட்டத்தில் இயேசுவை தெரியாது என்று மறுதலித்தவர். ஆனால் இயேசு கிறிஸ்து உயிரோடு எழுந்த பின்பு இந்த பேதுரு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார். அதன் பின்பு பேதுருவின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் உண்டானது. பேதுருவின் பிரசங்கத்தில் அநேகர் இரட்சிக்கப்பட்டனர். சாதாரணமான பேதுருவை, இயேசு அசாதாரணமாக பயன்படுத்தி பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்ய வைத்தார். ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணிமுடியாத அதிசயங்களையும் செய்கிறவர் அவரே.
இதை வாசிக்கும் அன்பரே, நம்முடைய ஆண்டவர் அற்புதங்களை, அதிசயங்களை செய்கிறவர். மனித மூளைக்கும், இயற்கைக்கும் அப்பாற்பட்ட காரியங்களைச் செய்து, நம்மை மகிழப் பண்ணுகிறவர். என்னுடைய வாழ்க்கையில் எதுவுமே நடக்கவில்லை. எனக்கு ஒரு அற்புதம் நடக்காதா என ஏங்கி தவிக்கின்ற ஒவ்வொருவருக்கும் ஆண்டவர் இந்த நாட்களில் அதிசயமான காரியங்களை செய்ய வல்லவராக இருக்கிறார். தொடர்ந்து ஜெபிப்போம் ஜெயம் எடுப்போம்!
- Mrs. பேபி காமராஜ்
ஜெபக்குறிப்பு:-
பள்ளி ஊழியங்களில் நாம் சந்திக்கும் பிள்ளைகள் கர்த்தரின் அன்பை அறிய ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864