By Village Missionary Movement
Thursday, 23-Apr-2026இன்றைய தியானம்(Tamil) 23.04.2026
எழுந்து கட்டுவோம் வாருங்கள்
"...தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்" - 2 கொரி. 8:2
ஆலய கட்டுமான பணிக்கு நாம் எப்படி உதவி செய்யலாம்? என்று பூ விற்கிற மேரியம்மாள் யோசித்தார்கள். நாம் கூடுதலாக பூவைக் கட்டி, அதை விற்று, அதனால் கிடைக்கிற இலாபத் தொகையினை ஆலயத்திற்குக் கொடுக்கலாம் என்று தீர்மானித்தார்கள். அன்றைய தினமே செயல்படவும் ஆரம்பித்தார்கள். அதிக நேரம் ஒதுக்கி, கூடுதலாக பூவை கட்டி விற்று, ஏறக்குறைய 6 மாதங்களில் ரூ 25,000 சேர்த்தார்கள். அதை ஆலயத்திற்குச் சென்று ஆயரிடம் ஒப்படைத்தார்கள். சபையாரும், ஆயரும் வியந்து போய் அந்த தாயின் பக்தி வைராக்கியத்தை கண்டு தேவனை மகிமைப்படுத்தினார்கள். இது ஒரு உண்மை நிகழ்வு.
அந்த தாயின் செயல் 2 கொரி. 8 : 3 ஐ நினைப்பூட்டுகிறது. அதில் மக்கெதோனியா சபையார் திராணிக்குத்தக்கதாகவும், திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்கள். மேலும் 2 கொரி.9 : 6,7 உள்ள வசனங்களில் "சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான். அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்" என்று அப். பவுல் சாட்சி பகர்கிறார்.
இன்று நாம் என்ன செய்யப் போகிறோம்?சுவிசேஷம் அறிவிக்கும் பணிக்கான தேவைகளின் பட்டியல் குறித்த பாரம் நம்மை நெருக்கி ஏவுகிறதா? மேரி அம்மாவைப் போல கர்த்தருக்காக, அவருடைய ஆலய பணிக்காக நான் எதையாகிலும் செய்ய வேண்டும் என்ற வாஞ்சை நம்மிடம் காணப்பட வேண்டும். அவர் நாமம் மகிமைப்பட, பிரஸ்தாபப்பட, பரலோக ராஜ்யம் கட்டப்பட, என் பங்களிப்பு என்ன? என்ற எண்ணம் நம்மிடையே காணப்படுகிறதா? அவர் நமக்கு கிருபையாய் கொடுத்த வாழ்வில், ஆத்துமா ஒன்றையும் இரட்சிக்காமல், வெறுங்கையாய் அவரை தரிசிக்கலாமா என்ற ஆத்தும பாரம் நம்மிடையே காணப்பட வேண்டும். நம் கடமையை உணர்ந்தவர்களாய் செயல்படுவோம், உதாரத்துவமாய் கொடுப்போம்.
தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து ஊழியம் செய்கின்ற மிஷனெரிகளின் திட்டங்கள் வெற்றி பெற, சுவிசேஷம் அறிவிக்கும் பணி தடையின்றி தொடர, உங்கள் ஜெபம் மிக மிக அவசியம். உங்கள் தாலந்துகள், உங்கள் செல்வம் எதுவாயினும் அவருடைய பணிக்கு அர்ப்பணம் செய்யுங்கள். இது அவசரம்! அவசியம்! இனி காலம் செல்லாது.
- Mrs .எமீமா சௌந்தரராஜன்
ஜெபக்குறிப்பு:-
வேதாகமம் இல்லாதவர்களுக்கு கொடுக்க வேதாகமத் தேவைக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864