By Village Missionary Movement
Saturday, 19-Jun-2021இன்றைய தியானம்(Tamil) 19-06-2021
“உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்.” – 1கொரிந்தியர் 1:28
உலகத்தார் தம் பிள்ளைகளுக்கு மணமக்களைத் தேர்ந்தெடுக்கும்போது மிகச் சிறந்த தகுதியுள்ளவர்களையே தெரிந்தெடுக்க விரும்புவர். இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும்போது மிகச் சிறந்த உடல் தகுதியுள்ளவர்களையே அரசு தெரிந்தெடுக்கும். ஆனால் கர்த்தர் தமக்காக மனிதர்களை தெரிந்துகொள்ளும்விதம் மிகவும் வித்தியாசம் என்பதற்கு கிறிஸ்மஸ் இவான்ஸ் என்ற தேவமனிதர் சிறந்த உதாரணம்.
வேல்ஸ் தேசத்தைச் சேர்ந்த இவர் வறுமையில் பிறந்து, வளர்ந்தவர். தகப்பனை இழந்து, துன்மார்க்கமான தாய்மாமாவால் 6 வருடங்கள் வளர்க்கப்பட்டு பல உபத்திரவங்களுக்கு உட்பட்டவர். அதன் காரணமாக வலது கண்ணை இழந்து, அந்த இடத்தில் குழி மாத்திரமே உண்டு. வசீகரமான தோற்றம் இல்லாதவர். 17 வயது வரை எழுதப்படிக்கத் தெரியாதவர். மனிதர்களின் பார்வையில் அற்பமாகவும் இழிவாகவும் எண்ணப்பட்டவர். தேவன் இவரை தெரிந்துகொண்டு மிக வல்லமையாக பயன்படுத்தினார்.
17-வது வயதில் ஒரு போதகரிடத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது இரட்சிக்கப்பட்டார். மிக விரைவாக எழுதப்படிக்க கர்த்தர் கிருபை கொடுத்தார். ஏழைகளுக்கு வீட்டு ஜெபக்கூட்டங்கள் நடத்த ஆரம்பித்தார். புத்தகங்களிலுள்ள பிரசங்கங்கள், ஜெபங்களை மனப்பாடம் செய்து ஊழியத்தில் பயன்படுத்தினார். பிரசங்கித்தல், பாடுதல் ஆகிய தாலந்துகளை இரத்தத்திலேயே ஊறியவைகளாகக் கொண்ட வேல்ஸ் மக்கள் வருடந்தோறும் பிரசங்கப் பண்டிகை ஒன்றை கொண்டாடுவார்கள். அதில் சுமார் 25,000 பேர் வரை கூடுவர். அதில் இவான்ஸ் பிரசங்கிக்க கர்த்தர் வாய்ப்பு கொடுத்தார். அவரது முதல் பிரசங்கத்திலேயே கர்த்தர் அக்கினி ஜீவாலையாக அவரை பயன்படுத்தினார். “ஒற்றைக் கண் பிரசங்கி” என்று அழைக்கப்பட்ட அவரைப் பற்றிய பேச்சே கூடிவந்தவர்களின் பேச்சாக அமைந்தது. பலத்த எழுப்புதல் ஏற்பட்டது. அவரது பிரசங்கத்தைக் கேட்க திரள் கூட்டத்தார் வந்தனர். உயிரற்ற ஆத்துமாக்கள், உயிரற்ற சபைகள் உயிர்மீட்சி அடைந்தனர். இவான்ஸ் மிக எளிமையாக ஜெபிக்கும் ஜெபவீரர்! வேதவாசிப்பு, ஆவிக்குரிய புத்தகங்களை வாசிப்பதுதான் அவர் உயிர் நாடி! சுவிசேஷம் அறிவிக்க கடினமான இடங்களையே தெரிந்தெடுப்பார். எதிர்ப்புகள், தடைகள் மத்தியில் அனேகரை இரட்சிக்க தேவன் அவரை பயன்படுத்தினார்.
கிறிஸ்மஸ் இவான்ஸ் மரித்தும் பேசுகிறார். ஆம், நம் தகுதிகள் கர்த்தருக்கு முக்கியம் அல்ல. நம் அர்ப்பணிப்பே அவருக்கு முக்கியம், எனவே எவ்வித தாழ்வு மனப்பான்மையினாலும் சோர்ந்து போகாமல், நம்மைத் தன் கரங்களில் எடுத்து பயன்படுத்தும் கர்த்தரிடத்தில் முழுவதுமாக அர்ப்பணித்து, தேவ ராஜ்யத்தை விரிவுபடுத்துவோமாக!
- Mrs. கீதா ரிச்சர்ட்
ஜெபக்குறிப்பு:
ஒவ்வொரு மாவட்டங்களிலும் வாலிபர்களுக்கென சிறப்பு முகாம்களை நடத்த தேவன் கிருபை செய்ய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250