By Village Missionary Movement
Monday, 23-Mar-2026இன்றைய தியானம்(Tamil) 23.03.2026
உக்கிராணக்காரர்கள்
“...உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்” - 1 கொரி. 4:2
இரும்பு வியாபாரி ஒருவர் அதிக நாட்கள் வெளி ஊருக்குப் போக வேண்டியிருந்தது. அப்போது அருகிலுள்ள மரக்கடைக்காரரிடம் என் கடையை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். அவரும் சம்மதித்தார். இரும்பு வியாபாரி வெளி ஊருக்குச் சென்று வேலையை முடித்து விட்டு வந்ததும் அதிர்ந்து போனார். ஏனெனில் இவர் கடையிலேயும் மர சாமான்கள், மரங்கள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த இரும்பு வியாபாரி என் கடையிலுள்ள சாமான்கள் எல்லாம் எங்கே என கேட்டதும், மர வியாபாரி இரும்பை எல்லாம் எறும்பு அரித்து விட்டது. எனவே மர சாமான்களை அடுக்கி விட்டேன் என்றார். உடனே அந்த வழக்கு ராஜாவிடம் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜா, இரும்பை எறும்பு அரித்தால் அவர் என்ன செய்வார்? விட்டுவிடு என்றார். இரும்பு வியாபாரி செய்வதறியாமல் திகைத்துப் போனார். ராஜாவின் மனதில் மரவியாபாரியின் தவறை உணர்த்தவேண்டும் என்ற சிந்தனை ஓடிக்கொண்டேயிருந்தது. இரவு நேரம் இரும்பு வியாபாரி வீட்டின் பின்பக்கம் மரம், மர சாமான்களை வீரர்கள் கொண்டு வந்து வைத்தனர். அவர் புரியாமல் நின்றார். மறுநாள் மர வியாபாரி கடையில் ஒன்றுமே இல்லை. அதற்கு காரணம் இரும்பு வியாபாரிதான், என ராஜாவிடம் அந்த வழக்கை கொண்டு போனார். இரும்பு வியாபாரிக்கு நேற்றிரவு நடந்தது புரிந்தது. அப்போது அவர் மரங்கள், மரசாமான்கள் எல்லாவற்றையும், எலி தூக்கிச் சென்று விட்டது என்றார். மர வியாபாரி எலி எப்படி தூக்கிச் செல்லும் என கோபப்பட்டார். ராஜா அவரிடம் இரும்பை எறும்பு அரித்ததை ஒத்துக் கொண்டது போல் இதையும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்றார். தன்னிடம் ஒப்புவிக்கப்பட்டதற்கு உண்மையாயிராத மரவியாபாரியை ராஜா சிறையிலடைத்தார்.
இதே போல் தான் இவ்வுலக வாழ்வு தேவன் நமக்குத் தந்த ஈவு. இதில் வீடு, ஆஸ்தி, செல்வங்கள், திறமைகள், அந்தஸ்து, குடும்பம் எல்லாம் நம் பொறுப்பில் கொடுக்கப்பட்டது. அவை நமக்கு சொந்தமானதல்ல. அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோமோ அதைப் பொறுத்து அது நம்மிடம் தக்க வைக்கப்படும். அதை தான் வேதம் உக்கிராணத்துவம் என்கிறது. நாம் ஒரு தாலந்து வாங்கிய நபரைப் போல் பொறுப்பில்லாமல் அலட்சியமாயிருந்தாலோ, நேபுகாத்நேச்சார் போல் என்னுடையது என எண்ணினாலோ, அவை நம்மிடம் இருந்து பிடுங்கப்படுவதோடு தண்டனையும் பெறுவோம். எனவே இவற்றையெல்லாம் நமக்குத் தந்த தேவனுக்காக அதை நாம் செலவிடுவதையே நம் பங்களிப்பு என்கிறோம். ஏனெனில் தேவன் நமக்குத் தந்ததை அவருக்காக செலவிடும் போது அவரின் ராஜ்யம் பூமியில் வரும். தேவன் ஜெபம் பண்ண கற்றுக் கொடுத்த போது சொன்னதும் அது தான். அன்பரே, உலகில் நமக்கு கொடுக்கப்பட்டவைகளுக்கு நாம் உரிமையாளர் அல்ல, உக்கிராணக்காரர். சொந்தக்காரர் தேவனே. அவரிடம் ஒரு நாள் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். அதை மனதில் கொண்டு தேவன் நமக்குத் தந்த நேரம், அந்தஸ்து, ஆஸ்தி, பிள்ளைகள், திறமைகள் எல்லாவற்றையும் அவருக்கென்று, அவருடைய ராஜ்யம் பூமியில் விரிவடைவதற்கென்று செலவிட்டு தேவ அசீர்வாதம் பெறுவோம். நாம் ஆண்டவரிடமிருந்து பெற்றுக் கொண்டவைகளை அவருடைய ராஜ்யத்தின் விரிவாக்கப் பணிக்காக பங்களிப்பாய் கொடுப்போம். அவர் கொடுப்பதை அமுக்கி, குலுக்கி சரிந்து விழும்படி கொடுப்பார். அவருக்காக கொடுக்க முன் வரலாமே!
ஜெபக்குறிப்பு:-
மிஷனெரி பயிற்சி கட்டடம் கட்டுவதற்கான அரசாங்க அனுமதி கிடைக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864