By Village Missionary Movement
Saturday, 21-Mar-2026இன்றைய தியானம்(Tamil) 21.03.2026
சந்திக்கும் காலம்
“...நீர் பாராட்டும் கிருபையின்படி என்னை நினைத்து, உம்முடைய இரட்சிப்பினால் என்னைச் சந்தித்தருளும்” - சங்கீதம் 106:5
வாலிபனாய் கால்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்த பில்லிகிரஹாமை ஆண்டவர் விளையாட்டு மைதானத்திலே சந்தித்து ஊழிய அழைப்பைக் கொடுத்தார். “என் மகனே, வெறும் விளையாட்டு வீரனாய் உன் காலத்தை வீணாக்கி விடுவாயா? உன் கண்களை ஏறெடுத்துப் பார். அறுவடை மிகுதியாய் இருக்கிறது வேலையாட்கள் இல்லையே. நீ என்னுடைய சுவிசேஷப் பணிக்கு வருவாயா?" என்று கர்த்தர் பேசின வார்த்தை பில்லி கிரஹாமின் இருதயத்தை உடைத்தது. தன் வாழ்வை தேவப்பணி செய்ய அர்ப்பணித்தார். அந்த அழைப்பின் சத்தம் கால் பந்தாட்ட வீரனான அவரை உலகப் பிரசித்தி பெற்ற மாபெரும் சுவிசேஷகனாக மாற்றி விட்டது.
பரிசுத்த வேதாகமத்தில் அப். 9 ஆம் அதிகாரத்தில் தமஸ்கு வீதியிலே சென்று கொண்டிருந்த சவுல் என்ற வாலிபனை திடீரென்று தேவன் சந்தித்தார். கர்த்தருடைய ஒளி சவுலின் மேல் பிரகாசித்ததினால் அவர் கீழே விழுந்தார். அந்த சந்திப்பு அவருடைய வாழ்க்கையில் பெரிய மாறுதலைக் கொண்டு வந்தது. சவுல் பவுலாக மாறினார். அதன்பின் அவரது வாழ்வையே தேவனுக்காக ஊற்றி விட்டார். ஆம், கர்த்தர் நம்மை சந்திக்கும் காலம் அற்புதமான ஒரு காலம். அந்த சந்திப்பினால் அளவற்ற நன்மைகளை கட்டளையிடுகிறார். நம்முடைய வாழ்வில் பெரிய மாறுதல்களை அந்த சந்திப்பு கொண்டு வருகின்றது. பிரசங்கி 3:1-8 வரையுள்ள வசனங்களில் சாலொமோன் பலவகையான காலங்களை குறித்து கூறுகின்றார். ஆம், ஒவ்வொன்றிற்கும் ஒரு காலம் உண்டு. இதிலே கர்த்தர் நம்மை சந்திக்கிற காலம் ஒன்று உண்டு. இரட்சிக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்துகிற ஒரு நேரம் உண்டு. நம்மோடு பேசி நம்மை உயிர்ப்பிக்கும் காலம் உண்டு. நம்மோடு உடன்படிக்கை செய்து நம்மை மேன்மைப்படுத்தும் தருணமும் உண்டு. நாம் தேவனுக்காக நம் வாழ்வை ஒப்படைத்து, செயல்பட்டு நமது பங்களிப்பை கொடுக்க வேண்டிய காலம் உண்டு. நாட்கள் மிக வேகமாய் கடந்து செல்கின்றது. மனம் போன போக்கில் காலத்தின் அருமையை அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிற ஜனங்களைக் குறித்து இயேசு கிறிஸ்து இன்றைக்கும் பரிதபிக்கிறவராய் இருக்கிறார்.
அருமையான தேவனுடைய பிள்ளைகளே, கர்த்தர் உங்களை சந்தித்ததுண்டா? உங்கள் வாழ்வு மாற்றப்பட்டுள்ளதா? அப்படியென்றால் நிச்சயமாக அழிந்து போகின்ற ஆத்துமாக்களின் மீட்பிற்காக நீங்கள் செயல்பட்டே ஆக வேண்டும். ஆத்துமா ஒன்றும் இரட்சிக்காமல் வெறுங்கையாய் அவரை சந்திக்க கூடுமோ? உங்கள் வாழ்வின் விலையேறப்பெற்ற நேரத்தை அவருக்காய் கொடுங்கள், காலத்தை அவருக்காக செலவிடுங்கள். நீங்கள் நினைத்ததை விடவும் வேண்டிக் கொள்வதை விடவும் ஆயிரமாயிரமான ஆத்துமாக்களைத் தந்து தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். உங்களை சந்தித்த இயேசுவை வருகையில் சந்திக்கும் போது மகிழ்ந்து களிகூருவீர்கள். அல்லேலூயா.
- Mrs. ஜெபக்கனி சேகர்
ஜெபக்குறிப்பு:-
தொற்காள் தையல் பயிற்சி மையத்தின் மூலம் அநேக பெண்கள் ஆசீர்வாதம் பெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864