By Village Missionary Movement
Thursday, 19-Mar-2026இன்றைய தியானம்(Tamil) 19.03.2026
என்னுடையதை உமக்குத் தருவேன்
"...அவனவனுக்குத் தேவையானதற்குத் தக்கதாய்ப் பகிர்ந்து கொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை" - அப். 4:35
தென்கொரிய தேச ஊழியர் பால்யாங்கிசோ, வெளி தேசத்து ஊழியர் ஒருவரை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வயலில் உழுது கொண்டிருந்த வயதான மனிதரை அந்த வெளிநாட்டு ஊழியர் கண்டார். மாடுகளுக்குப் பதில் இரண்டு வாலிபரை அந்த ஏரில் பூட்டி, இவர் உழுவதைக் கண்டு மனமுடைந்த ஊழியர் அவரை அழைத்து விசாரிக்கலானார். பால்யாங்கிசோவும் கண்ணீரோடு சொன்னார்," இவர்கள் என் ஆலயத்திற்கு வரும் விசுவாசிகள். ஆலயக் கட்டுமானப் பணிக்காக பணம் திரட்டிய போது அவரிடம் பணம் இல்லாததால், தன்னுடைய இரண்டு மாடுகளையும் விற்று, அப்பணத்தை ஆலயம் கட்டக் கொடுத்தார். அதனால் அந்த இரண்டு மாடுகள் நின்ற இடத்தில் அவருடைய இரண்டு வாலிபப் பையன்களும் நின்று ஏரை இழுத்துச் செல்கின்றனர்" என்றார். இவ்வூழியர், அப்பெரியவரைப் பார்த்து, தேவனுக்கு எவ்வளவோ கொடுத்தவர்களை பார்த்திருக்கிறேன், ஆனால் உங்கள் தியாகமான நன்கொடை என் இதயத்தை அசைத்து விட்டது என்று கண்கலங்கினார். அதற்கு அப்பெரியவர் ஐயா, நான் செய்தது தியாகம் அல்ல, ஒரு பாக்கியமாகவே நினைக்கிறேன். இதனால் பல மடங்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன் என்றார்.
வேதத்திலே ஒரு அருமையான சம்பவத்தை லூக்கா 21:1-4 வரை உள்ள வசனங்களில் வாசிக்க முடியும். எத்தனையோ பேர் அதிகமாக தேவனுக்குக் கொடுத்திருக்க, தன்னுடைய வறுமையிலிருந்து தன் ஜீவியத்திற்காக, உயிர் வாழ்வதற்காக வைத்திருந்த அந்த இரண்டு காசையும் தேவனுக்கென்று கொடுத்து விட்ட அந்த ஏழை விதவையைப் பற்றி இயேசுவே சாட்சி கொடுத்தார். நாம் கர்த்தருக்குக் கொடுப்பது என்பது நமது பரிபூரணத்திலிருந்தல்ல, நமக்கு இருக்கும் கொஞ்சத்திலும் மன நிறைவாகக் கொடுப்பதே. நாம் கொடுக்கவேண்டுமென்றால் rich ஆக இருக்க வேண்டுமென்பதல்ல, இருதயத்தில் rich ஆக இருந்தால் போதும்.
இதை வாசிக்கும் அன்பர்களே, நாமும் எத்தனையோ தியாகங்கள் செய்து ஆண்டவருக்குக் கொடுத்தாலும், இயேசு நமக்காக கல்வாரியில் செய்த தியாகத்திற்கு ஈடாகவோ, இணையாகவோ அது மாறிவிடாது. அதனால் நமக்கு முடியும் போதெல்லாம் தேவனுக்கும் அவருடைய ஊழியங்களுக்கும் பகிர்ந்து கொடுத்துக் கொண்டே இருப்போம். நமது பங்களிப்பாக நம்மால் இயன்றதை செய்து கொண்டே இருப்போம். தேவன் மகிமைப் படுவார்.
- Mrs. பிரிசில்லா தியோபிலஸ்
ஜெபக்குறிப்பு:-
தொற்காள் தையல் பயிற்சி மையத்திற்கு வரும் ஒவ்வொருவரும் சீஷர்களாய் மாற ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864