By Village Missionary Movement
Saturday, 14-Mar-2026இன்றைய தியானம்(Tamil) 14.03.2026
தேவனுக்கு உன் பங்களிப்பு என்ன?
"கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்,..." - மத்தேயு 25:23
ஒரு எஜமான், புறதேசத்திற்குச் செல்லும் போது, தன் ஊழியக்காரர்களிடம் அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், மற்றொருவனிடம் ஒரு தாலந்தும் கொடுத்துப் பிரயாணப்பட்டுப் போனார். அவர் திரும்பி வந்தபொழுது, ஐந்து தாலந்தை வாங்கினவன் வேறு ஐந்து தாலந்துகளைச் சம்பாதித்து கொண்டு வந்தான். அதேபோல், இரண்டு தாலந்து பெற்றவனும் வேறு இரண்டு தாலந்துகளைச் சம்பாதித்திருந்தான். ஆனால், ஒரு தாலந்தைப் பெற்றவனோ, சோம்பலாய் இருந்து அதை நிலத்தில் புதைத்து வைத்தான். ஆகவே எஜமான், அவனை அழுகையும் பற்கடிப்பும் நிறைந்த புறம்பான இருளில் போட உத்தரவிட்டார். எவ்வளவு பெரிய தண்டனை பெற்றான் அவன்!
இதைப்போலத்தான் ஆண்டவர் நம் ஒவ்வொருவருக்கும் பலவிதமான தாலந்துகளை, திறமைகளை, வாய்ப்புகளை கொடுத்து, தேவனுக்காகப் பணிபுரிய அழைக்கிறார். நாம் அவருக்காக என்ன செய்து கொண்டிருக்கிறோம்? தேவனுக்காக நேரம் கொடுத்து சுவிசேஷம் அறிவிக்கிறோமா? அல்லது ஆத்துமாக்கள் ஆதாயம் அடையும் விதமாக கைப்பிரதிகள் கொடுக்கிறோமா? அல்லது துன்பத்திலும் குறைவிலும் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய நம் கரங்களை நீட்டுகிறோமா? நம்மையே ஆராய்ந்து பார்ப்போம். வேதத்தில் இயேசுவுக்கென்று தன் வாழ்வையும், தன் பொருளையும் அர்ப்பணித்த சிலரைப் பற்றி நாம் காணலாம்.
இயேசு சிலுவையைச் சுமந்து சென்று கொண்டிருந்தபொழுது, சிரேனே ஊரானாகிய சீமோன் அவருடைய சிலுவையைச் சுமந்து வரும்படி பலவந்தப்படுத்தப்பட்டான். தன் நேரத்தையும், பிரயாசத்தையும் இயேசுவுக்காக உபயோகப்படுத்தியது அவனுடைய பங்களிப்பாக இருந்தது. அடுத்ததாக, இயேசு எருசலேமுக்குப் பவனியாகச் செல்ல வேண்டியிருந்தபொழுது, ஒரு கழுதை தேவைப்பட்டது. ஒரு வீட்டார் தங்கள் பங்களிப்பாக கழுதையைக் கொடுத்தார்கள். அதுபோல, இயேசுவுக்குத் தேவையானது நம்மைப் போல ஒரு “கழுதை”யாகக் கூட இருக்கலாம். நம்மை முழுவதும் அவருக்கென்று அர்ப்பணிப்போம். அந்தக் கழுதை இயேசுவைச் சுமந்து சென்றதுபோல், நாமும் இயேசுவைச் சுமக்கும் கழுதைகளாய் இருக்க நம்மை அர்ப்பணிப்போம்.
இயேசு சிலுவையில் மரித்தபின்பு அவரை அடக்கம் செய்ய, தனக்காக வெட்டி வைத்திருந்த புதிய கல்லறையை அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு இயேசுவுக்கென்று கொடுத்தான். அது இன்றளவும் நினைவு கூறப்படுகிறது. அதுபோல, நாமும் நம்முடைய பங்களிப்பை தேவனுக்கென்று கொடுத்து அவரை மகிமைப்படுத்துவோமாக! ஆமென்.
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:-
மருத்துவமனை ஊழியங்களில் நம் ஊழியர்களை தேவன் பயன்படுத்த ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864