By Village Missionary Movement
Friday, 13-Mar-2026இன்றைய தியானம்(Tamil) 13.03.2026
தேவ பணியில் பங்களிப்பு
"...எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லாரும்... கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தார்கள்" - யாத். 35:21
கர்த்தருடைய திட்டம் இப்பூமியில் நிறைவேற வேண்டுமாயின், நம் ஒவ்வொருவருடைய பங்களிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக ஆசரிப்பு கூடாரத்தை நிறுவ ஒரு மாதிரி வரைபடத்தை மோசே காண்பித்து, மக்களின் ஒத்துழைப்பைக் கேட்டார். மக்களும் மனப்பூர்வமாய் கொடுத்தார்கள். மோசே, கூடாரத்தை நிறுவ என்னென்ன பொருட்கள் உபயோகிக்க வேண்டும் என்பதையும், அந்த வேலைகளை செய்ய கண்காணிப்புக்காரர்களாக, விசித்திர வேலைகள் செய்வதில் திறமைப் பெற்ற நிபுணர்களான பெசலெயேலும் அகோலியாபுவையும் தெரிந்தெடுக்கிறார். மோசே ஜனங்களிடத்தில் கர்த்தரின் விருப்பத்தை விவரித்தவுடன் ஜனங்கள் ஆவியில் உற்சாகமடைந்தார்கள்.
அவரவர் தங்கள் தகுதிக் கேற்ப பொன் ஆபரணங்கள், நூல் வகைகள், தோல் வகைகள், வெள்ளி, வெண்கலம், சீத்திம் மரம் ஆகியவற்றை கொடுத்தார்கள். பொருட்கள் கொடுக்க இயலாதவர்கள் தங்கள் திறமைகள், தாலந்துகளை பயன்படுத்தி கட்டுமான பணிக்கு உதவினார்கள். தலைவன் மோசேக்காக அல்ல, தேவனுக்கென உற்சாகமாய் கொடுத்தார்கள். மோசே கூறியதும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக, உற்சாகமாக, மனப்பூர்வமாக கொடுத்தனர். ஜனங்கள் காலை தோறும் தங்களுக்கு இஷ்டமான காணிக்கைகளை கொண்டு வந்து குவித்தனர். அப்பொழுது வேலை செய்கிற விவேகிகள் வந்து மோசேயை நோக்கி, கர்த்தர் செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருட்களை ஜனங்கள் கொண்டு வருகிறார்கள் என்றார்கள். புருஷர்களும், பெண்களும் உற்சாகமாய், மனப்பூர்வமாய் கொடுத்தார்கள். ஆரம்ப காலத்தில் போதும் இனிமேல் காணிக்கைகள் வர வேண்டாம் என்று தடுத்து நிறுத்தும் அளவிற்கு அவர்களின் பங்களிப்பு இருந்தது.
எனக்கன்பானவர்களே, தேவசித்தமும், அவரது திட்டமும் பூமியில் நிறைவேற தேவதூதர்களின் பங்களிப்பை அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நாம் ஒவ்வொருவரும் தேவன் நமக்கு கொடுத்த எல்லாவற்றிலுமிருந்து சஞ்சலத்தோடல்ல, சந்தோஷத்தோடு தாராளமாய் கொடுக்க வேண்டுமென்று விரும்புகிறார். கட்டாயமாய் கொடு என்று கழுத்தை பிடிக்கிறவரல்ல, சுயாதீனத்தை நமக்கு தந்திருக்கிறார். அவரிடமிருந்து கணக்கில்லாமல் பெற்றுக்கொண்ட நாம் அவருக்கு கணக்கு பார்த்தல்ல, இஸ்ரவேல் ஜனங்களைப்போல உற்சாகமாய் நம்முடைய பங்களிப்பை கொடுத்து தேவதிட்டம் நிறைவேற நம்மை அர்ப்பணிப்போம்.
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:-
நம் ஊழியர்கள் சந்திக்கும் கிராமங்கள் கிறிஸ்துவின் அன்பிற்குள் வர ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864