By Village Missionary Movement
Wednesday, 04-Mar-2026இன்றைய தியானம்(Tamil) 04.03.2026
நல்ல சமாரியனின் நல்ல பங்கு
"அதற்கு அவன்: (நியாயசாஸ்திரி) அவனுக்கு இரக்கஞ்செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றார்” - லூக்கா 10:37
ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான். அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுச் சென்றனர். அந்த வழியே வந்த ஆசாரியனும், லேவியனும் அவனைக் கண்டு பக்கமாய் விலகிப் போனார்கள். பின்பு சமாரியன் ஒருவன் அவனைப் பார்த்து, மனதுருகி, கிட்ட வந்து காயங்களைக் கட்டி, தனது சுயவாகனத்தில் ஏற்றி, சத்திரத்தில் கொண்டு போய் சேர்த்து பராமரித்தான். இது இயேசு கிறிஸ்து சொன்ன ஒரு உவமை!
லேவியன், ஆசாரியன் இவர்களிடம் இல்லாத நல்ல சுபாவம் சமாரியனிடம் காணப்பட்டது. இந்த சமாரியன் தனது நேரத்தை செலவு செய்தான். காயப்பட்டு கிடந்தவனின் காயங்களுக்கு எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, சத்திரத்தில் கொண்டு போய் சேர்த்து பணமும் செலவழித்தான். முன் பின் தெரியாத ஒருவருக்கு எந்த எதிர்பார்ப்புமின்றி சமாரியன் செய்த உதவி இயேசு கிறிஸ்துவால் பாராட்டப்பட்டது. இது லெந்து காலம். சபைகளிலே அதிகாலை ஆராதனை, திருவிருந்து ஆராதனை, சிறப்பு கன்வென்ஷன் கூட்டங்கள், பிடி அரிசி காணிக்கை, சுயவெறுப்பு காணிக்கை என பல காரியங்களை நாம் மேற்கொண்டு வருகிறோம். இவை அனைத்தும் மிக நல்லதே. இந்த உவமையில் காணப்பட்டதைப் போல லேவியர்களும், ஆசாரியர்களும் இப்படிப்பட்ட அனைத்து காரியங்களையும் நேர்த்தியாய் செய்தனர். ஆனால் தன் முன் கிடந்த தேவையுள்ள ஒரு மனிதனுக்கு உதவ மனமின்றி பக்கமாய் விலகிச் சென்றனர்.
இந்த லெந்து காலத்திலும் நாம் பல காரியங்களை பல ஆண்டுகளாய் செய்து வரலாம். ஆனால் நம் கண் முன் இருக்கும் தேவையுள்ள ஜனங்களுக்கு நல்ல சமாரியனைப் போல நல்ல பங்கை செலுத்துகிறோமா என்று சிந்தித்துப் பார்க்க அழைக்கப்படுகிறோம். நாம் நமது ஆலயத்திற்குக் கட்டாயம் கொடுக்க வேண்டும். அது தேவனின் கட்டளை. அதே நேரத்தில் தேவன் எதிர்பார்க்கும் சுபாவமாற்றம் நம்மில் உண்டா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.
இந்த உவமையிலிருந்து இன்னுமொரு காரியத்தையும் தேவன் நமக்கு கற்றுக்கொடுக்கிறார். காயப்பட்டு கிடந்தவன் போல் இன்றைக்கு சுவிசேஷ ஊழியம் இருக்கிறது. ஆசாரியனும், லேவியனும் பக்கமாய் விலகிப் போனதைப் போல சுவிசேஷம் அறிவிக்கப்படாத கிராமங்களை கண்டும் காணாமல் நாம் இருக்கிறோமா? அல்லது நம்முடைய நேரத்தை, தாலந்தை, செல்வத்தை சுவிசேஷ பணிக்கன்று கொடுத்து நம் பங்களிப்பை ஆற்றுகிறோமா? நல்ல சமாரியனின் இந்த நல்ல பங்கு மூலம் ஆண்டவர் நம்மோடு இடைபடுகிறார். நான் நல்ல சமாரியனா?
- Rev. S.ஜோதி நாயகம்
ஜெபக்குறிப்பு :-
தெபொராள்களின் சுகம் மற்றும் குடும்ப ஆசீர்வாதத்திற்காக ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864