By Village Missionary Movement
Tuesday, 03-Mar-2026இன்றைய தியானம்(Tamil) 03.03.2026
வெற்றிடத்தை நிரப்பும் பங்களிப்பு
"...சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்.” -அப். 1:26
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் சிறந்த பவுலர்களுக்கான வெற்றிடம் காணப்பட்ட காலகட்டம் அது. எதிர் அணியினரை சமாளிக்க முடியாமல் திணறி நின்றனர் அணியினர். அப்போதுதான் ஒரு பவுலராக ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் இணைந்தவர் கிலென் மெக்ராத். இவரது பந்துவீச்சு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து விட்டது. அணியின் வெற்றிக்காக மிகவும் பாடுபட்டார். தொடர்ந்து மூன்று முறை உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற்றிருந்தார். இவர் இடம் பெற்ற அணி அந்த நாட்களில் அசைக்க முடியாத ஒரு கிரிக்கெட் அணியாக மாறி ஒட்டுமொத்த உலகிற்கு சவாலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வேதத்தில் அப்போஸ்தலர் முதல் அதிகாரத்தில் ஒரு சம்பவத்தை பார்க்கிறோம். 12 சீஷர்களில் 11 பேர் மட்டுமே இருந்தனர். ஒருவர் இல்லை. நாம் 11 பேர் மட்டும் இருப்போம் என்று இல்லாமல் இன்னொருவரை தேர்ந்தெடுப்பதற்கு சீஷர்கள் ஜெபித்து முடிவெடுக்கின்றனர். அப்போதுதான் சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது என்று பார்க்கிறோம். அந்த மத்தியா தன்னை 11 சீஷர்களோடு இணைத்துக்கொண்டு சுவிசேஷம் பரவுவதற்கு தன்னால் முடிந்த பங்களிப்பை செலுத்தினார்.
பிரியமானவர்களே, இன்று தேவராஜ்யம் கட்டப்படுவதற்கு தங்கள் பங்களிப்பை கொடுப்போர் வரிசையில் அநேக வெற்றிடம் உள்ளது. அதிகாலையில் எழுந்து ஜெபிக்க, பரிந்து பேசி ஜெபிக்க, இன்னும் தினந்தோறும் கிராமங்களுக்குச் சென்று ஊழியம் செய்ய, வீட்டு ஜெபக்குழு நடத்த வெற்றிடம் உள்ளது. சபைகளும் ஊழிய ஸ்தாபனங்களும் எண்ணிக்கையில் பெருகிக் கொண்டே சென்றாலும், இன்னும் மக்கள் சந்திக்கப்படவில்லை. சுவிசேஷம் எல்லா இடங்களுக்கும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு, இதை வாசிக்கிற உங்கள் ஒவ்வொருவர் மேலும் சீட்டு விழுகிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். கிராம மிஷனெரி இயக்க ஊழியத்தில் அதிகாலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை ஒரு ஊழியர் மற்றும் கிறிஸ்தவர் என்னவெல்லாம் பங்களிப்பு கொடுக்கலாம் என்று சொல்லி பல திட்டத்தோடு செயல்படுகிறோம். இதில் நீங்கள் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறீர்களா? இந்த தேசத்தில், ஊழியத்தில் காணப்படும் வெற்றிடத்தை நிரப்ப நீங்கள் உங்கள் பங்களிப்பை கொடுக்க முன் வருவீர்களா? "எனது பங்களிப்பின் ஆண்டு" என்று இந்த ஆண்டில் செயல்பட ஒவ்வொருவரையும் அழைக்கிறோம். ஆமென்.
- T. சங்கர் ராஜ்
ஜெபக்குறிப்பு:-
நம்மோடு இணைந்துள்ள தெபொராள்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864