By Village Missionary Movement
Sunday, 01-Mar-2026இன்றைய தியானம்(Tamil) 01.03.2026 (Kids Special)
சிறந்த பங்களிப்பு
"கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்;... " - லூக்கா 6:38
ஹலோ செல்லங்களே! இன்றைக்கு உண்மையாகவே நடந்த ஒரு சம்பவத்தை கேட்கப்போகிறோம். கவனமாக கேளுங்கள் O.K வா. எங்க பார்த்தாலும் தண்ணீர் இல்லை, கிராமங்களிலுள்ள வயல் நிலங்கள் காய்ந்து போய் கிடந்தது. வேலையும் இல்லை மழை பெய்யாததால் பஞ்சம் அதிகமாய் காணப்பட்டது. சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் ஜனங்கள் மிகவும் கஷ்டப்பட்டாங்க. இந்த நிலையில் தான் எலியா என்ற தீர்க்கதரிசி ஆண்டவர் கட்டளையிட்டபடியே, சாறிபாத் என்ற ஊருக்கு போறாங்க. அந்த ஊரின் எல்லையில் ஒரு விதவை விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாங்க. எனக்கு கொஞ்சம் குடிக்க தண்ணி தாயேன் என்று எலியா தாத்தா கேட்டாங்க. அந்த அம்மாவும் சரியென்று தண்ணீர் எடுக்க போகும் போது, எனக்கு பசிக்குது கொஞ்சம் அப்பம் கொடு என்றார். உடனே அந்த விதவை தாய் என் வீட்டில் ஒரு பிடி மாவும், கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல் அடை ஒன்றுமில்லை என்றாள். நானும் என் மகனும் அதை சாப்பிட்டதற்கு அப்புறம் வேறு வழியில்லை சாகத்தான் வேண்டும் என்றார்கள். அதற்கு எலியா தாத்தா நீ முதலில் எனக்கு ஒரு அடையை செய்து கொண்டு வா. தேசத்தில் மழை பெய்யும் வரை உன் வீட்டில் மாவும், எண்ணெயும் குறையாது என்று சொன்னார்.
என்ன குட்டீஸ்! எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும் அந்த தாய்க்கு. அடுத்த நேர சாப்பாட்டிற்கே வழியில்லை. ஆனால் அந்த எலியா தீர்க்கதரிசி கேட்டபடி முதல் அடையை செய்து கொண்டு வந்து அவருக்கு கொடுத்தாள். என்ன ஒரு அதிசயம் நடந்தது தெரியுமா? திரும்ப வீட்டுக்கு போய் அடை செய்ய மாவு எடுத்தா குறையவே இல்லை, இன்னும் கொஞ்சம் மாவு எடுக்க அப்படியே இருந்தது. எண்ணெயும் அப்படியே குறையாமல் இருந்தது. அந்த தேசத்தில் மழை பெய்யும் நாள் மட்டும் அதாவது பஞ்சம் முடியும் வரை சாறிபாத் விதவை வீட்டில் மாவும் எண்ணெயும் குறையவே இல்லை குட்டீஸ். எலியா தீர்க்கதரிசி சொன்னபடியே நடந்தது. குட்டீஸ், கேட்கவே ஆச்சரியமா இருக்குதே. அந்த அற்புதத்தை நேரே பார்த்தவங்க எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாங்க. அது மட்டுமா? அந்த அற்புதத்தைப் பார்க்க நிறைய ஜனங்கள் வந்து ஆண்டவர் நாமத்தை மகிமைப்படுத்தி இருப்பாங்க அப்படித்தானே.
அன்பான தம்பி தங்காய், அடுத்த வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையிலும், தன் பசியை ஆற்ற இருந்த உணவை கொடுத்தாங்க. எவ்வளவு பெரிய மனசு. அந்த பங்களிப்பை மறக்காத ஆண்டவர் சாறிபாத் விதவைக்கு மறக்க முடியாத அற்புதத்தைச் செய்தார். குட்டீஸ், நீங்க இயேசப்பாவுக்கு என்ன கொடுக்க போறீங்க. சிந்தித்து, செயல்படுங்க. ஆண்டவர் கிருபை உங்களோடிருக்கட்டும். ஆமென்.
- Mrs .ஜீவா விஜய்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864