Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 25.02.2026
Share:

By Village Missionary Movement

Wednesday, 25-Feb-2026

இன்றைய தியானம்(Tamil) 25.02.2026

 

பிரம்மிக்கத்தக்க

 

"நான் பிரம்மிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்;..." - சங்கீதம் 139:14

 

ஒரு விவசாயி நிலத்தை உழுது, பண்படுத்தி, விதையை அள்ளித் தூவி, அதற்கு தண்ணீர் பாய்ச்சி, பின்பு விளைச்சலைக் காண காத்திருக்கிறார். மண்ணுக்குள் இருக்கிற விதைக்குள் கிரியை நடைபெறுகிறது. சிறிய விதை செடியாகி, பின்பு பெரிய மரமாகி, பூத்து, காய்த்து கனி கொடுக்கிறது. ஆண்டவருடைய இந்த செயல்கள் ஆச்சரியமானவைகள். தேவனே அதை விளையச் செய்கிறார். பச்சை புல்லை தின்கிற பசு மனிதர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த வெண்மை நிற பாலைத் தருகிறது. என்றாவது அது ஆண்டவருடைய ஆச்சரியமான செயல் என யோசித்தோமா? இல்லையே. பிரம்மிக்கத்தக்க விதமாய் உருவாக்கப்பட்டோம். கர்த்தரின் கிரியைகள் அதிசயமானவைகள். நம் இதயம் என்றாவது நான் சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறேன் என்று தன் ஓட்டத்தை நிறுத்தியுள்ளதா? அப்படி நிறுத்தினால் நாம் உயிர் வாழ முடியுமா? நம் ஆண்டவரின் செயல்கள் எவ்வளவு அருமையானது! ஒவ்வொரு நாளும் நம் இருதயத்தை இயக்கி பாதுகாத்து வருகிற நம் தகப்பனுக்கு நிமிடம் தோறும் நன்றி செலுத்த வேண்டுமே.

 

நாம் வாகனங்களை உபயோகப்படுத்துகிறோம். எவ்வளவுதான் விலை உயர்ந்த வாகனமாக இருந்தாலும் அதை சில மணி நேரங்கள் தான் தொடர்ந்து ஓட்ட முடியும். பின்பு அதை நிறுத்தி, எரிபொருள் நிரப்பி, ஓய்வு கொடுத்து விட்டு தான் தொடர்ந்து ஓட்ட முடியும். ஆனால் பாருங்கள் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருடம் மெத்தூசலாவின் இருதயத்தை தடையின்றி துடிக்கச் செய்து காத்து வந்தாரே (ஆதி.5:27). அதைத்தான் சங்கீதக்காரன் என்னை விசித்திர வினோதமா உருவாக்கினீரே என சொல்கிறார்.

 

நமக்கு ஆபத்து நேரிடும் போது, நாம் கவனமற்று இருப்பதில்லை. ஒரு நொடிப் பொழுதில் மூளை கவனத்தில் கொண்டு கண் பார்க்கிறது, கால்கள் ஓடித் தப்பிக்க முயல்கிறது, வாய் “இயேசுவே” எனக்கூறி ஆண்டவரின் உதவியை நாடுகிறது, கைகள் தீங்கைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கிறது. எப்படி நம் சரீரம் முழுவதும் செயல்படுகிறது பாருங்கள். இந்த ஆச்சரியமான தன்னிச்சையான செயல்களை செய்ய உணர்வைக் கொடுத்தவர் யார்? கர்த்தரே. அவரே நம் ஒவ்வொரு அவயவங்களையும் பாதுகாக்கிறார். சிலுவையில் தம்முடைய சரீரத்தை நொறுக்க கொடுத்த தேவனைத் துதிப்போம். நம் அவயவங்கள் ஒன்றிணைந்து செயல்படுவதைப்போல், விசுவாசிகளாக, ஊழியர்களாக நாம் ஒன்றுபட்டு வேலை செய்யும்போது, ஆண்டவர் நமக்கு கொடுத்த தரிசனத்தை, திட்டத்தை செவ்வையாய் முடிக்க தேவனே கிருபைகளை தருவாராக. வெற்றி நிச்சயம் என விசுவாசிப்போம்.

- I. ஜெயபால்   

 

ஜெபக்குறிப்பு:-

கண்மணிப் பிள்ளைகள் இயேசுவுக்காக ஜெபத்திட்டத்தில் இணைந்துள்ள பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு ஆசீர்வதிக்கப்பட ஜெபியுங்கள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al