By Village Missionary Movement
Monday, 16-Feb-2026இன்றைய தியானம்(Tamil) 16.02.2026
வாய்க்காலை வெட்டுங்கள்
"...இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள்." -2 இராஜா. 3:16
இஸ்ரவேலின் ராஜாவிற்கு விரோதமாய் மோவாபின் ராஜா யுத்தத்திற்கு வந்தார். அப்போது இஸ்ரவேலின் ராஜா, தனக்கு உதவிக்கு வரும்படி ஏதோமின் ராஜாவை அழைக்கிறார். அவர்கள் இருவரும் வருகின்றனர். மூன்று ராஜாக்களும், படைவீரர்களுமாக ஏதோம் வனாந்தரம் வழியாகச் சென்றனர். ஏழு நாள் வனாந்தரத்தில் சுற்றினர், தண்ணீர் இல்லை. படைவீரர்களுக்கும், மிருக ஜீவன்களுக்கும் தண்ணீர் இல்லாததால் சோர்ந்து போயினர். இஸ்ரவேலின் ராஜா கர்த்தரிடத்தில் விசாரிக்க தீர்க்கதரிசியை அழைத்து வர சொல்கிறார். எலிசா தீர்க்கதரிசி வருகிறார். அப்போது எலிசா தீர்க்கதரிசி, இந்தப் பள்ளத்தாக்கிலே வாய்க்கால்களை வெட்டுங்கள். காற்று, மழை இல்லாமல் பள்ளங்கள் தண்ணீரால் நிரம்பும். நீங்களும் மிருக ஜீவன்களும் குடித்து திருப்தியாகுங்கள். மோவாபியரை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று கூறுகிறார். அதே போல் நடந்தது.
கர்த்தர் சொன்னால் அதை நிறைவேற்றுவார். நீங்களும் கூட உங்கள் வாழ்வில் ஏதோ ஒரு காரியத்தில் காத்திருந்து கிடைக்காததால் சோர்ந்து போயிருக்கிறீர்களா? ஏதோ ஒரு குறைவால் கஷ்டத்தோடு, வேதனையோடு இருக்கிறீர்களா? அப்படியானால் வாய்க்கால்களை வெட்டுங்கள். நீங்கள் நினைத்த, எதிர்பார்த்த காரியம் கிடைக்கப்பெறும், குறைவு நிறைவாகும். வாய்க்கால்களை வெட்டுதல் என்பது நம் ஜெப வாழ்வு, வேதவாசிப்பு, பரிசுத்தம். இவற்றை நாம் ஆராய்ந்து பார்த்து, நம்மை நாம் சரிபடுத்துவது ஆகும். வாய்க்காலை வெட்டி அவரை நெருங்கி சேர வேண்டும். நாம் அவ்வாறு செய்யும் போது வெற்றியை பெற முடியும்.
யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தும் போது, எதிராக யோர்தான் வந்தபோது உங்களைப் பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள், நாளைக்கு கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்கிறார். ஆம், அற்புதங்கள் நடக்க வேண்டுமானால் தேவனோடுள்ள நம் தனிப்பட்ட உறவு சரிசெய்யப்பட வேண்டும். அதை ஆராய்ந்து பார்த்து சரி செய்வோம். அப்போது நம் தேவைகள் சந்திக்கப்படுவதோடு கர்த்தர் நம்மை அநேகருக்கு ஆசீர்வாதமாகவும் பயன்படுத்துவார்.
- Bro. டேவிட் கணேசன்
ஜெபக்குறிப்பு:-
ஒவ்வொரு மாநிலத்திலும் 500 மிஷனரிகள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864