By Village Missionary Movement
Saturday, 14-Feb-2026இன்றைய தியானம்(Tamil) 14.02.2026
உண்மையான அன்பு எது?
"...நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார்..." - யோவான் 21:16
வேதத்தை வாசிக்கின்ற நமக்கு இயேசு கிறிஸ்து ஒருவர் மாத்திரமே மிகவும் அன்பானவர். அவரது அன்பு ஒரு கூட்டத்து மக்களுக்கு மாத்திரம் அல்ல, யோவான் 3 : 16 ல் உள்ளதுபோல முழு உலகத்திலும் அன்பு கூர்ந்தார். இதை வாசிக்கிற வாலிபர்களுக்கு ஒன்றை குறிப்பிடுகிறேன்.
வேத புத்தகத்தில் உன்னதப்பாட்டு என்ற புத்தகம் இருக்கிறது. இது ஒரு அற்புதமான காதல் கடிதம் (Love Letter). இதுபோன்ற ஒரு காதல் கடிதம் யாரும் எழுதியது இல்லை, இனி எழுதப் போவதும் இல்லை. காதலன் மணவாளன் -இயேசு, காதலி மணவாட்டி - திருச்சபை. உன்னதப்பாட்டு 4:7 ல், "என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை". கிறிஸ்துவின் அன்பு, சிலுவையில் வெளிப்பட்டது. அவர் யாரையும் கண்டிக்கவோ, தீர்ப்பிடவோ அல்ல, மாறாக இருகரம் விரித்து அனைவரையும் அரவணைக்கின்ற மகா பெரிய அன்பு. யோவான் 8:11 ல் விபசாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணைப் பார்த்து, "நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே" என்றார். கல்லெறிய மனமில்லாத அன்பு.
மலைப் பிரசங்கத்தின் போது மக்கள் பசியாயிருக்கிறார்கள் என்று மனதுருகி, அவர்களின் பசியை போக்கிய அன்பு. மார்த்தாள், மரியாளின் சகோதரன் லாசரு மரித்த போது, அவர்களின் கண்ணீரைத் துடைத்த அன்பு. குஷ்டரோகிகளுக்கு சுகம் கொடுத்த அன்பு. குருடர்களுக்கு பார்வை கொடுத்த அன்பு. பிசாசு பிடித்தவர்களுக்கு விடுதலை கொடுத்த அன்பு. சிலுவையில் மரிக்கும்போது கூட பிதாவே, இவர்களுக்கு மன்னியும் என்று சொன்ன அன்பு. மறுதலித்த பேதுருவையும் என்னை நேசிக்கின்றாயா என்று மூன்று முறை கேட்டு, என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று கட்டளையிட்ட அன்பு. இயேசுவின் அன்பு மாத்திரமே நிலையானது, உண்மையானது. நாம் வீழ்ந்தாலும்-வாழ்ந்தாலும், ஜெயித்தாலும் -தோற்றாலும், ஆரோக்கியத்திலும்-வியாதியிலும், செழிப்பிலும்-குறைவிலும் நம்மை ஒரே மாதிரி நேசிக்கக்கூடிய அன்பு அவரது அன்பு மாத்திரமே!
அருமையான வாலிபர்களே, இந்த உலகத்திலே இயேசு கிறிஸ்துவின் அன்பைவிட உன்னை அதிகமாக நேசிக்க யாராலும் முடியாது. உலகமனைத்திற்காகவும் ஜீவனையே கொடுக்கும்படி வந்த இயேசுவின் அன்பைக் காட்டிலும் பெரிய அன்பு கிடையாது. எதிர்பாலினத்தவரின் அன்புக்காய் ஏங்கி ஏமாறாதே! இயேசு உன்னை நேசிக்கிறார் ஆமென்.
- Rev. S. ஜோதிநாயகம்
ஜெபக்குறிப்பு:-
எல்லா தாலுகாவிலும் சங்கிலித் தொடர் ஜெபம் ஏறெடுக்கப்படஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864