By Village Missionary Movement
Monday, 14-Jun-2021இன்றைய தியானம்(Tamil) 14-06-2021
இழப்பிலும் நன்மை
“…தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.” – ரோமர் 8:28
ஆஸ்திரேலியாவின் கிரஹாம் ஸ்டெயின்ஸ் என்ற மிஷனெரி இந்தியாவில் ஒரிஸா மாநிலம், கந்தமால் மாவட்டத்திற்கு நேரடியாக வந்து தொழுநோயாளிகள் மற்றும் பிறருக்கு தேவனின் அன்பை அறிவித்து ஊழியம் செய்து வந்தார். ஜனவரி 22, 1999ம் ஆண்டு கிரஹாம் ஸ்டெயின்ஸ், அவரது மகன்கள் பிலிப்பு, தீமோத்தேயு ஆகிய மூவரையும் சுவிசேஷ எதிர்ப்பாளர்கள் ஜீப்பிற்குள் பூட்டி நெருப்பிட்டு கொன்று போட்டனர். தனது வாலிப மகள் எஸ்தருடன் தன்னந்தனியாய் நின்ற கிளாடிஸ் அம்மையார், தனது கணவர் மற்றும் பிள்ளைகளைக் கொலை செய்தவர்களை இயேசு மன்னித்தது போல் மன்னிப்பதாகக் கூறினார். இது அனைத்து தேசப் பத்திரிக்கைகளிலும் தலைப்புச் செய்தியாக வந்தது. கிரஹாம் ஸ்டெயின்ஸ் வாழ்க்கைச் சரிதையை எழுதும்படி சென்ற ஒரு புத்தக ஆசிரியர் கிளாடிஸ் அம்மையாரிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்கள். “தேவன் எப்பொழுதும் யாருடைய வாழ்விலும் தவறு செய்வதில்லை, நன்மை மாத்திரமே செய்வார். உங்கள் கணவர் மற்றும் பிள்ளைகள் இறந்த காரியத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள், அது தேவன் செய்த நன்மையா?” என்ற கடினமான கேள்வியைக் கேட்ட பொழுது, “ஆம் அதுவும் நன்மையாகவே நினைக்கிறேன். ஏனெனில் ஸ்டெயின்ஸ் அவர்கள் தொழுநோயாளிகளுக்கென ஒரு மருத்துவமனை கட்டவேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தார். அவர் இறந்த ஒரு வருடத்திற்குள் ஒரு மருத்துவமனையைக் கட்ட தேவன் உதவி செய்திருக்கிறார். அவர் நினைத்தது நடந்துவிட்டது. இதுவும் நன்மைக்குத்தான்” என்றார்களாம். “கடைசியாக எனது கணவரும், பிள்ளைகளும் செய்ய வேண்டிய காரியங்களை முடித்துவிட்டார்கள். நாம் பிழைத்திருக்கிறோம். நம் பணிகள் நமக்காக காத்துக் கொண்டிருக்கிறது. உலகம் தான் சுற்றுவதை நிறுத்திவிட வில்லையே” என்று உற்சாகத்தோடு பதிலளித்தார்களாம்.
அன்பு சகோதரனே, சகோதரியே! இந்த நெருக்கடியான காலத்தில் நம் குடும்பத்தின் நபர்கள், நண்பர்கள், உறவினர்கள், ஊழியர்கள் என நமக்குப் பிரியமான நபர்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கலாம். சமாதான பிரபுவாகிய நம் தேவனே உங்கள் ஒவ்வொருவரையும் ஆற்றித் தேற்றுவாராக. நம் தலையிலுள்ள முடிகளையெல்லாம் கணக்கு வைத்து நம்மை கவனமாய் கவனித்துக் கொண்டிருக்கிற தேவன், நமது வாழ்வில் எப்பொழுதும் தவறு செய்யவே மாட்டார். இதை ஏற்றுக்கொள்வது கஷ்டமாக இருந்தாலும் தேவ பெலத்தைச் சார்ந்துகொள்வோம்.
“என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணின பின்பு,… நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.” (யோவான் 14: 2, 3) என்று வாக்குப்பண்ணின தேவன் நம் அனைவரோடுங்கூட இருக்கிறார். அந்த நாளுக்காக நாம் காத்திருப்போம். அந்த நாள்வரை நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை, வேலைகளை, ஊழியங்களை நிறைவேற்றுவோம். எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்வதாக. ஆமென்.
ஜெபக்குறிப்பு:
நம்பிக்கை T.V நிகழ்ச்சிகளை பார்க்கும் புறஜாதிமக்களும் இயேசுவின் அன்பை அறிந்து அற்புதம் பெற ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250