By Village Missionary Movement
Thursday, 05-Feb-2026இன்றைய தியானம்(Tamil) 05.02.2026
செயல் வீரர்
"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;..." - பிரசங்கி 9:10
நம் கல்வி, ஆஸ்தி, உடைமைகள், தாலந்து, ஞானம், செல்வாக்கு, அந்தஸ்து, நன்மை செய்யும் குண நலன்கள் எல்லாமே கர்த்தர் நமக்குத் தந்த கிருபையின் ஈவுகள் ஆகும். எனக்கு இத்தகைய கிருபை ஈவு எதுவும் கிடையாது என்று நம்மில் யாரும் கூற முடியாது. அவற்றை கர்த்தரின் நாம மகிமைக்காகவே உபயோகிக்கும் போது கர்த்தர் மகிமைப்படுவார், நாமும் ஆசீர்வதிக்கப்பட்டு, பிறருக்கு ஆசீர்வாதமாகவும் விளங்குவோம்.
“எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.” (கொலோ. 3:24). “எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக;..” (1 பேதுரு 4:11) என்றெல்லாம் வேதம் நமக்கு ஆலோசனை தருகிறது.
தாவீதுக்கு கர்த்தர் கொடுத்த தாலந்துகள் மூலமாக இனிய சங்கீதங்களை இன்பமாகப் பாடினார். சாலொமோனுக்கு கர்த்தர் கொடுத்த ஞானத்தினால் 3000 நீதிமொழிகள், 1005 பாடல்கள் எழுதினார். இவர்கள் மூலமாக இன்று வரை கோடிக்கணக்கானோர் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். எஸ்தர் தனக்கு கிடைத்த ராஜ மேன்மை, அந்தஸ்தை பயன்படுத்தி, தன் இனத்தவரை பேரழிவிலிருந்து இரட்சித்தார். பேதுரு தன் உடமையான ஒரு படகை இயேசுவுக்கு கொடுத்தபோது, இயேசுவின் ஊழியம் நிறைவேறியது. மீன் ஒன்றும் அகப்படாத போது பேதுருவும், அவன் கூட்டாளிகளும் படகுகள் அமிழத்தக்கதாக இரட்டிப்பான ஆசீர்வாதம் பெற்றனர். அரிமத்தியா யோசேப்பு தன் செல்வாக்கையும், துணிவையும் பயன்படுத்தி, பிலாத்துவிடம் சென்று இயேசுவின் சரீரத்தைக் கேட்டு, அதை மிகுந்த மரியாதையுடன் புதிய கல்லறையில் அடக்கம் செய்தார். நான்கு சுவிசேஷங்களிலும் இடம்பெற்றார். நற்கிரியைகளையும், தானதர்மங்களையும் செய்து வந்த தபீத்தாள் மரித்தும் உயிர்பெற்றாள். அநேக தர்மங்களையும், நற்கிரியைகளையும் செய்து வந்த கொர்நேலியு மூலம் புறஜாதிகளையும் சுவிசேஷம் சென்றடைந்தது.
பிரியமானவர்களே! நாமும் கர்த்தர் நமக்கு கொடுத்த கிருபைகளை கர்த்தருக்காக பயன்படுத்தும் போது தேவநாமம் மகிமைப்படும். நாமும் ஆசீர்வதிக்கப்பட்டு, பிறருக்கும் ஆசீர்வாதமாக இருப்போம். செயல்வீரர்களாக மாறுவோமா?
- Mrs. கீதா ரிச்சர்ட்
ஜெபக்குறிப்பு:
டியூஷன் சென்டரில் படிக்கும் பிள்ளைகள் தேவ அன்பை அறிய ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864