By Village Missionary Movement
Monday, 02-Feb-2026இன்றைய தியானம்(Tamil) 02.02.2026
தோல்வி என்பதில்லையே
"நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்." - 1 கொரி. 15:57
இஸ்ரவேலருக்கும் பெலிஸ்தருக்கும் யுத்தம். இது ஒரு புதுவிதமான யுத்தம். பெலிஸ்தர் இஸ்ரவேலருக்கு விரோதமாய் படை திரண்டு வந்தனர். இஸ்ரவேல் படையினரும் பாளயமிறங்கினர். ஆனால் யுத்தம் நடக்கவில்லை. பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து கோலியாத் என்னும் ஒரு வீரன் வந்து, ஒருவன் என்னோடு தனியாக சண்டையிட்டு வென்றால் இஸ்ரவேலர் வென்றதாகவும், நான் வென்றால் பெலிஸ்தர் வென்றதாகவும் கொள்வோம் என்று சொல்லி இஸ்ரவேலின் சேனையை நிந்தித்தான்.
இஸ்ரவேலின் ராஜா சவுல் மற்றும் இஸ்ரவேலின் சேனை அனைத்தும் சகல பயிற்சியும் பெற்றிருந்தும், கோலியாத்தின் வார்த்தைகளைக் கேட்டு பயந்து, தங்கள் தோல்வியை ஒத்துக்கொண்டு அமைதியாக இருந்தனர். ஆனால் தகப்பனுக்கு கீழ்ப்படிந்து, தன் சகோதரர்களை பார்க்க வந்த தாவீதால் தோல்வியை ஒத்துக்கொள்ள முடியவில்லை. நான் வந்ததற்கு முகாந்தரம் இல்லையா என்று சொல்லி, தன்னை தேவன் பழக்குவித்த, நடத்தி வந்த பாதையை விவரிக்கிறார். அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்தித்தானே, என்னைச் சிங்கத்தின் கைக்கும், கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர், இந்த பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என முன்னோக்கிச் சென்றார். தன்னை பின்னுக்கு இழுக்கிற சகோதரரின் வார்த்தைகள், கோலியாத்தின் பலம் ஒன்றையும் பாராமல், சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே சென்று ஜெயம் பெற்றார். போராட்டங்கள், பிரச்சனைகள் வரும்போது நாம் தோல்வியை ஒத்துக்கொள்ளாமல், கிறிஸ்துவோடு இணைந்து தொடர்ந்து முயற்சிக்கும் போது ஜெயத்தை சுதந்தரிக்கலாம். நமக்கு இருக்கும் பெலன் முக்கியமல்ல, நம் நம்பிக்கை யார் மீது என்பதே முக்கியம்.
பிரியமானவர்களே, நீங்களும் கூட எந்த சூழ்நிலையிலும் தோல்வியை ஒத்துக்கொள்ளாமல், தொடர்ந்து கிறிஸ்துவோடு இணைந்து முயற்சி செய்யுங்கள். என்னால் முடியாது என தோல்வியை ஒத்துக்கொள்ளும்போது பயம், சோர்வு வந்து நம்மை முன்னோக்கி செல்ல விடாமல், ஜெயத்தை சுதந்தரிக்க விடாமல் தடுக்கும். ஆதலால் தான் சாலொமோன் ஞானி, "ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது" (நீதி. 24:10) என்கிறார். நல்ல போராட்டத்தைப் போராடி, ஓட்டத்தை முடித்து விசுவாசத்தைக் காத்துக்கொண்டு பவுல் சொல்கிறார், "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு" (பிலிப்பியர் 4:13) என்று. நீங்களும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், ஜெயத்தை சுதந்தரியுங்கள்.
- Bro. டேவிட் கணேசன்
ஜெபக்குறிப்பு:
இம்மாத ஊழியங்களுக்காக, ஊழியர்களோடு தேவகரம் இருக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864