By Village Missionary Movement
Tuesday, 20-Jan-2026இன்றைய தியானம்(Tamil) 20.01.2026
பிரதிபலன் உண்டு
“நீங்களோ உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு என்றான்” - 2 நாளா. 15:7
இந்த உலகில் உண்மையாக ஊழியம் செய்கிறவர்கள் அநேகர் தாங்கள் வஞ்சிக்கப்பட்டுவிட்டதாகவும், தங்கள் செயலுக்கு எந்த பிரதிபலனும் இல்லாதது போலவும் நினைக்கிறார்கள். அநேக ஆண்டுகள் பணி செய்து ஓய்வு பெற்ற பின், தங்கள் வாழ்க்கையே வீணாகி போய்விட்டதாக உணருகிறார்கள். பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற பின், தங்களுக்கு குடியிருக்க ஒரு வீடு கூட இல்லையே என எண்ணுபவர்கள் உண்டு. நான் உண்மையாக செய்த ஊழியத்துக்குப் பலன் தான் என்ன என்று வேதனைப்படுகிறார்கள். ஜோசப் கிரேட்ஸில் என்பவர் அடுக்குமாடி வீடு ஒன்றில் லிப்ட் ஆபரேட்டராக வேலைபார்த்தார். அங்கு 14,000 டாலர் மதிப்புடைய மூன்று காசோலைகள் காணாமல் போய்விட்டன. பல மணி நேர தேடுதல் முயற்சிக்குப்பின் அந்த மூன்று காசோலைகளையும் அவர் கண்டு பிடித்து அதை உரியவர்களிடம் ஒப்படைத்தார். அவரின் இந்த நற்செயலுக்கு அவருக்குக் கொடுக்கப்பட்ட வெகுமதி வெறும் 15 அமெரிக்க டாலர்கள் மட்டுமே. இந்த உலகில் அநேகர் தங்களது கடின உழைப்புக்கும், நேர்மைக்கும் பிரதிபலன் எதுவுமே கிடைக்காதது போல உணருகிறார்கள்.
விசுவாசிகள் கூட, “தேவனைச் சேவிப்பது விருதா, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதினாலும், சேனைகளின் கர்த்தருக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதினாலும் என்ன பிரயோஜனம்?” என்று சிந்திக்கிறார்கள் (மல்கியா 3:14). ஏனெனில் இப்பூவுலகில் துன்மார்க்கர் செழித்து, ஓங்கி வளர்வது போலவும், தேவனுடைய பிள்ளைகள் துன்பமடைவது போலவும் தோன்றுகிறது.
தேவனுடைய பிள்ளைகளே! உங்கள் உண்மைக்கும், பொறுமைக்கும், கடின உழைப்புக்கும், நீங்கள் செய்கின்ற ஊழியத்துக்கும் இந்த உலகில் மதிப்பில்லாமலும், கைம்மாறு இல்லாமலும் போகலாம். ஆனால் பரலோகத்தில் அவைகள் மறக்கப்படுவதில்லை. “ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான்” என்பது வேத வாக்கு (1 கொரி. 3:14). ஆகவே திடன் கொள்ளுங்கள். உங்கள் கிரியைகளுக்குத்தக்க பலன் உண்டு. நமக்குப் பிரதிபலன் தேவனிடமிருந்து கிடைக்கப்பெறும். “நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது” என்கிறார் தேவன் (வெளி. 22:11,12). எனவே பிரதான மேய்ப்பர் வெளிப்படும் போது கிடைக்கப்போகிற மகிமை நிறைந்த நித்தியமான வாடாத கிரீடத்திற்காகப் பொறுமையுடன் காத்திருப்போம்.
- Mrs. கலைச்செல்வி பவுல்ராஜ்
ஜெபக்குறிப்பு:-
ஒடிசாவில் நடைபெறும் ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864