By Village Missionary Movement
Wednesday, 14-Jan-2026இன்றைய தியானம்(Tamil) 14.01.2026
பூரண சமாதானம்
“…நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்" - ஏசாயா 26:3
மூன்று நண்பர்கள் 1976 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி அன்று சூரியன் உதிப்பதை நாம் தான் முதலில் காண வேண்டும் எனத் தீர்மானித்தனர். இதனால் 7000 அடி உயரமான அமெரிக்காவிலுள்ள ஓரிகன் என்ற மலையை தேர்ந்தெடுத்து, மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டனர். டிசம்பர் 31 ஆம் தேதி இரவு மலை உச்சியை அடைந்தனர். அதிகாலை சூரியன் உதிப்பதை மற்ற அமெரிக்கர்கள் பார்ப்பதற்கு முன் பார்த்து ரசித்தனர். மிகுந்த மகிழ்ச்சியோடு மலையிலிருந்து இறங்கி வரும் போது, பனிப்பொழிவு மிகுதியினால் மலையிலிருந்து இறங்க முடியாமல் தவித்தனர். மூவரும், மூன்று விதமான மனநிலையில் இருந்தனர். இதில் "கேரி விண்டர்" என்ற வாலிபன் இயேசுவின் மேல் நம்பிக்கை உள்ளவர். 16 நாட்கள் ஆன பின்பும் கேரி விண்டர் விசுவாசத்துடன் மகிழ்ச்சியோடு காணப்பட்டார். அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை. மீட்புக் குழு ஹெலிகாப்டர் இவர்களை பத்திரமாய் மீட்டது. உடனிருந்த இரண்டு நண்பர்களும் கூறிய சாட்சி, “கேரி விண்டர் இயேசுவின் மேல் கொண்ட நம்பிக்கையே எங்களையும் காப்பாற்றியது. எந்த சூழ்நிலையிலும் இயேசுவின் மேலுள்ள நம்பிக்கையை எங்களை விட்டு அகற்ற முடியாது” என்றனர். நம்முடைய வாழ்வு பிறர் வாழ்க்கையை மாற்றக்கூடியதாய் இருப்பதை "கேரி விண்டர்" வாழ்க்கையிலிருந்து காணமுடிகிறது. பிலி.4:6,7 வசனங்களில் "நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும்." பவுல் அப்போஸ்தலர் "தேவ சமாதானம்" இருதயத்திலும், சிந்தனையிலும் இருந்து, நம்மை காக்கிறது என்பதாக கூறுகிறார். பவுல் சிறையிலிருக்கும் போதும் “தேவ சமாதானம்” இருதயத்திலும், சிந்தையிலும் இருந்து காத்தது.
பிரியமானவர்களே! இந்த புதிய ஆண்டிலும், நம் சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும், நாம் கர்த்தரோடிருந்தால் தேவ சமாதானம் பூரணமாய் நம்மை நிரப்ப முடியும். உலக மனிதர்களுக்கு பிரச்சனை மாறினால் சமாதானம். ஆனால் தேவனுடைய பிள்ளைகளுடைய வாழ்வில் வரும் பிரச்சனைகள் மாறுவதற்கு முன்பே, அதாவது ஜெபித்த உடனேயே எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உள்ளத்தை நிரப்ப முடியும். நாம் கர்த்தரை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதுடையவர்களாய் இருப்போமானால், பூரண சமாதானத்துடன் கர்த்தர் நம்மை காத்துக் கொள்வார்.
- Mrs. பாத்திமா செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:-
பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டத்தின் மூலம் தேவையோடிருக்கும் மக்கள் பயன்பெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864