By Village Missionary Movement
Wednesday, 07-Jan-2026இன்றைய தியானம்(Tamil) 07.01.2026
கர்த்தரின் கிருபை தாங்குகிறது
"என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்;..." - சங்கீதம் 23:6
நீண்ட காலம் வாழ்ந்த ஒரு மனிதரிடம், அவரின் நீண்ட கால வாழ்வின் இரகசியத்தை அறிய விரும்பி, அநேக நிருபர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு கேள்விக் கணைகளைத் தொடுத்தனர். பதில் சொல்ல ஆர்வம் இல்லாதவர் போல நான் சத்தான உணவுகளையும் எடுத்துக் கொள்ளவில்லை, சிறப்பான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. "நான் நீடூழி காலம் வாழ்வதற்கான காரணம் என் தேவன் ஒருவரே, அவர் கிருபை மட்டுமே என்னைத் தாங்கி இதுவரை வழிநடத்தி வருகிறது” என்றார்.
2025 ஆம் ஆண்டு தொடங்கி மற்றுமொரு புது ஆண்டான 2026 ஐ காண தேவன் கிருபை செய்துள்ளார். எத்தனையோ பிரச்சனைகள், பயங்கரங்கள், பொல்லாப்புகள் நிறைந்த இந்த உலகில் வாழும் நமக்கு, தேவன் ஒருவரே பாதுகாப்பு. "நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே" . "நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன்" என்ற தேவாதி தேவன், எத்தகைய கடின சூழ்நிலைகள் வந்தாலும் நம்மை பாதுகாக்க வல்லவர்.
பலவிதமான இயற்கை சீற்றங்கள், புயல், மழை, கொடிய விபத்துக்கள், கொலை, கொள்ளைகள் போன்ற பயங்கர சோதனைகளை கடந்த ஆண்டிலே கண்டோம். ஆனாலும் தேவ ஜனங்களாகிய நாம் தேவனின் பலத்தக் கரத்தில் பாதுகாப்பாக இருக்கிறோம்.
நாம் கர்த்தரால் சுகபத்திரமாய் பாதுகாக்கப்படுவதற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. அது நாம் அவரைக் குறித்து அநேகருக்குச் சொல்லவேண்டுமென்பதே. நமக்கு ஜீவன், சுகம், பெலன் மற்றும் ஆரோக்கியம் கொடுத்தவர், மற்றவர்களுக்கும் கொடுக்க வல்லமையுள்ளவர் என்பதை நம் கடைசி மூச்சு வரை சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். அது அநேகரை ஆண்டவரண்டை வழிநடத்தும்.
எனக்கன்பானவர்களே, நமது காலங்கள் தேவனின் கரத்திலுள்ளது. " நான் உங்களைத் தாங்குவேன்; ஏந்துவேன்; சுமப்பேன், தப்புவிப்பேன்" என்ற ஆண்டவர் எல்லா நேரங்களிலும், எல்லாச் சூழ்நிலையிலும் நம்முடனிருக்கிறார். நம் கரங்களைப் பிடித்து தம் மார்பில் அணைத்துக் கொண்டிருக்கும் தேவன், இந்த ஆண்டு முழுவதும் நம்மை ஒவ்வொரு நொடியும் காத்துக்கொள்வாராக! ஆமென்.
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:
விருதுநகர் - மதுரை NH ரோட்டில் ஜெப கோபுரம் கட்டுவதற்கான இடம் வாங்க பணத்தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864