By Village Missionary Movement
Tuesday, 06-Jan-2026இன்றைய தியானம்(Tamil) 06.01.2026
என்னில் நிலைத்திருங்கள்
“...நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்” - யோவான் 15:4
ஒரு முறை என் வீட்டிற்கு அருகிலுள்ள தோட்டத்தில் திராட்சை செடி ஒன்று வளர்ந்தது. அத்தோட்டத்தின் உரிமையாளர் அதற்கு பந்தல் போட்டு வளர்த்து வந்தனர். களைகளை பொறுக்கி, உரமிட்டு, தண்ணீர் ஊற்றி அதை கண்ணும் கருத்துமாக வளர்த்தனர். பல நாட்கள் கழித்து அதில் பூ பூத்து, காய் காய்த்து கனி வந்தது. ஒரே செடியில் கொத்து கொத்தாய் நிறைய பழங்கள் கிடைத்தது. அதைப் பார்க்கும் போது தான் எனக்கு இந்த வசனங்கள் ஞாபகத்திற்கு வந்தது.
கொடியானது திராட்சைச் செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனி கொடுக்க மாட்டாது. அது போல நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால் கனி கொடுக்க மாட்டீர்கள் என வேதம் சொல்கிறது. ஆம், திராட்சை செடியை கனி கொடுக்க வேண்டும் என்பதற்காக நாம் வைத்திருக்கிறோம். அது போல தேவன் நம் ஒவ்வொருவர் மீதும் ஒரு திட்டத்தை வைத்துள்ளார். அதற்கேற்ற கனி கொடுக்க வேண்டுமானால் நாம் அவரில் நிலைத்திருக்க வேண்டும். அவ்வாறு நிலைத்திராவிட்டால் நம்மால் ஒன்றும் செய்யக் கூடாது. ஒவ்வொரு நாளும் நாம் நடக்க வேண்டிய காரியங்களை வேதத்தின் மூலம் அறிந்து கொண்டு, அதில் நிலைத்திருத்தலே கர்த்தரில் நிலைத்திருப்பதாகும்.
நாம் கர்த்தரிலும், அவரின் வார்த்தைகள் நம் வாழ்விலும் நிலைத்திருக்க வேண்டும். அவருடைய வார்த்தைகளுக்கு நாம் கீழ்ப்படிந்து கைக்கொண்டு வாழும் போது, மிகுந்த கனிகளைக் கொடுக்க முடியும். ஏனெனில் அவருடைய வார்த்தை நம்மை சுத்திகரிக்கிறது. தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை நமக்கு சுட்டிக் காட்டி, அதை விடவும், அவருடைய இருதயத்தின் விருப்பம் அறிந்து செயல்படவும் வழிகாட்டுகிறது. நம் கையிலுள்ள வேதமே அவருடைய வார்த்தை. கர்த்தரை நேசித்து அவரது வேதத்தை வாசிக்கும் போது ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பது நிச்சயம். கர்த்தருடைய வேதம் நம் வாழ்வாக மாற வேண்டும்.
அன்பரே, சில சமயம் வேத வார்த்தைகள் நம்மை, நம் சுய சித்தத்தை உடைப்பதாயிருக்கும், கண்டிக்கிறவைகளாயிருக்கும், எச்சரிப்பதாயிருக்கும், நம்மை சுத்திகரிக்கும். அவர் நம் அருகில் இருக்கிறார் என்பதற்கான சான்று சுத்திகரித்தல் ஆகும். ஆனால் இவையெல்லாம் நாம் கனி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே. இந்த ஆண்டில் நாம் தேவனுக்கும், நம் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் பயனுள்ள கனிகளைக் கொடுக்க, அவரின் வார்த்தையில் நிலைத்திருப்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
- Mrs. லைட்டி
ஜெபக்குறிப்பு
Mission Action Centre எல்லா தாலுகாவிலும் செயல்பட இடம் கிடைக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864