By Village Missionary Movement
Friday, 02-Jan-2026இன்றைய தியானம்(Tamil) 02.01.2026
பழையன கழிதல் புதியன புகுதல்
"...நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை..." - எபிரெயர் 13:5
ஓர் ஆண்டு துவங்கும் போது புதிய ஆண்டில் தேவன் வைத்திருக்கும் காரியங்களை ஆவலோடு எதிர்பார்க்கிறோம். அதே வேளையில் கடந்து சென்ற ஆண்டின் கவலைகள், வேதனைகள், தோல்விகள், பாவங்கள், குற்றங்கள் நம் நினைவிற்கு வரும் போது நம்மை சோர்வடையச் செய்கின்றன. அதோடு எதிர்கால பயங்கள் நம்மை வாட்டுகின்றன. ஆனால் நம் தேவன் நம்மை விட்டு விலகுவதுமில்லை, நம்மைக் கைவிடுவதுமில்லை என்று வாக்களித்திருக்கிறார். கடந்த வருடத்தின் ஏற்றத்தாழ்வுகள், கரடு முரடான பாதைகள், துக்கங்கள், நம்மால் சுமக்கக் கூடாத சுமைகள் எல்லாவற்றிலிருந்தும் தேவ கிருபையும், பராமரிப்பும் நம்மை வெளிக்கொண்டு வந்துள்ளன. அப்படியிருக்க, கடந்த ஆண்டின் பாரங்களோ, வரும் ஆண்டின் பயங்களோ நம்மை மேற்கொள்ள வேண்டியதில்லை.
புத்தாண்டின் ஒவ்வொரு நாளும் தேவனோடு இணைந்து பணியாற்ற, அவருக்கு காத்திருக்க, ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற, அவரைத் துதிக்க, தேவப்பிரசன்னம் நம்மோடு இருப்பதை நிரூபிக்கும் நாளாக இருக்க தேவன் கிருபை செய்வாராக. ஒவ்வொரு நாளும் தேவனின் இரக்கம், உண்மை, கிருபை, அவரது முகப்பிரகாசத்தின் மகிழ்ச்சி ஆகியவற்றை அனுபவிக்கும் நாளாக இருக்கட்டும். நம்முடைய தேவைகள், பாரங்கள், பெலவீனங்கள் ஆகியவற்றை கர்த்தருக்குத் தெரிவிக்கவும், அவரது இருதயத் துடிப்பை அறிந்து கொள்ளவும், அவரது அன்பு மார்பில் சாய்ந்து கொள்ளும் நாளாக இருக்கட்டும். அவர் தரும் அமைதி, ஆறுதல், இளைப்பாறுதலை விசுவாசிக்கும் நாளாகவும், ஒவ்வொரு நாளும் அவருக்கு சேவை செய்யும் நாளாகவும் மாறட்டும். ஆம், ஒவ்வொரு நாளும் அவரது அன்பிற்கு சாட்சி பகரும் நாள்! பரலோக வாழ்விற்கு நம்மை பயிற்றுவிக்கும் நாள்! நாம் இம்மையில் இருந்தாலும், மறுமைக்குள் பிரவேசித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாகவே இருப்பதற்கு தரப்பட்ட நாள்.
பிரியமானவர்களே, புத்தாண்டின் ஒவ்வொரு நாளையும் மேற்கண்ட நன்மைகளைப் பெறும்படி, ஜெபித்துத் துவங்கி ஆசீர்வதிக்கப்படுவோமாக! கர்த்தர் நல்லவர் என்பதையும், அவர் கிருபை என்றுமுள்ளது என்பதையும் ருசித்துப் பார்ப்போமாக.
- Mrs. கீதா ரிச்சர்ட்
ஜெபக்குறிப்பு
இவ்வாண்டின் இலக்குகள், தரிசனங்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864