By Village Missionary Movement
Thursday, 01-Jan-2026இன்றைய தியானம்(Tamil) 01.01.2026 (Happy New Year - 2026)
உடனிருக்கும் தேவன்
“...நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” - யோசுவா 1:5
ஊழியத்தின் ஆரம்ப ஆண்டுகளில் ஒரு முறை நான் இரவு ஜெபத்திற்காக ஆயத்தப்பட்ட போது, தேவன் அநேக தீர்க்கதரிசன வார்த்தைகளைத் தந்தார். நான் புறப்பட்டு அங்கு செல்ல 50 ரூபாய் தேவை. அது என்னிடம் இல்லை. ஆனால் தேவன் வார்த்தைகளைத் தந்துள்ளார், நான் எப்படி அங்கு போகாமல் இருப்பதென்று எனக்குள் ஒரு எண்ணம். ஆகவே நான் கிளம்பி பஸ் ஸ்டாண்டுக்குச் சென்றேன். அங்கு பார்வையில்லாத ஒருவர் வந்தார். நான் அவரிடம் இயேசு உங்களை நேசிக்கிறார் என்றேன். அவர் நானும் ஊழியர் தான் என்றார். என்னிடம் பேசி விட்டு செல்லும் போது என் கையில் 50 ரூபாய் தந்தார். நானும் தேவனுக்கு நன்றி செலுத்தி இரவு ஜெபத்திற்குச் சென்று கர்த்தருக்கு மகிமையாய் ஊழியத்தை செய்து முடித்தேன். தேவன் எனக்கு தீர்க்கதரிசன வார்த்தையைத் தந்ததோடு என்னை விட்டு விடாமல், என் உடனிருந்து என்னை நடத்தினார்.
அதே போல் பேதுரு இயேசுவை மறுதலித்த போதும், தேவன் அதோடு விட்டு விடாமல் பேதுருவை நோக்கிப் பார்த்தார். உடனே பேதுரு மனங்கசந்து அழுதார். இயேசு உடனிருந்து அவரை வல்லமையாய்ப் பயன்படுத்தினார். பேதுருவின் நிழல் பட்டு சுகம், அவருடைய கச்சை, உருமால்கள் பட்டு சுகம் பெறும்படியாய் தேவன் உடனிருந்து நடத்தினார். நம்மை உண்டாக்கிய தேவன், நாம் அவரைவிட்டு விலகினாலும் நம்மை மன்னித்து நம் உடனிருந்து காக்கிறார். நாமும் அவரோடு இருக்க வாஞ்சிக்கும் போது, நம்மையும் வல்லமையாய்ப் பயன்படுத்துகிறவருமாயிருக்கிறார்.
பிரியமானவர்களே, நம் தேவன் எவ்வளவு அன்புள்ளவர்! நம்மை விட்டு விலகாமல் நம்மை நடத்துகிற தேவனை நாமும் விடாமல் பின்பற்றிக் கொள்வோம். கடந்து வந்த இத்தனை ஆண்டுகாலமாய் நம்மை ஒரு போதும் கைவிடாத கர்த்தருக்கு இந்த ஆண்டு நாம் என்ன செய்யப் போகிறோம். நமது பங்களிப்பாக நம்மால் இயன்றதை செய்வோமா? அதனை மையமாக வைத்து, இந்தப் புதிய ஆண்டை “பங்களிப்பைத் தீர்மானிக்கும் ஆண்டு” என வைக்கும் படி தேவன் வழிநடத்தினார். நமது குடும்பத்திற்காக நாம் எவ்வளவு பிரயாசப்படுகிறோம். ஆனால் நம் மூலம் தேவனுக்கு பயனுண்டா? லாபமுண்டா? இல்லை. எனவே அவருக்கு பயனுண்டாக, லாபமுண்டாக நமது பங்களிப்பைத் தீர்மானித்துக் கொடுக்க இந்த ஆண்டில் செயல்படுவோம். உடனிருக்கிற கர்த்தர் விலகாதவராய் நம்முடனிருந்து நம்மை வழிநடத்துவாராக. ஆமென். Wish you all a happy and blessed new year.
- Bro. டேவிட் கணேசன்
ஜெபக்குறிப்பு:
இம்மாத ஊழியங்களுக்காக, ஊழியர்களின் சுகத்திற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864