By Village Missionary Movement
Wednesday, 31-Dec-2025இன்றைய தியானம்(Tamil) 31.12.2025
கர்த்தரை துதித்துப் பாடுங்கள்
“கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்" - சங்கீதம் 34:1
சீனாவுக்கு மிஷனெரியாக சென்ற ஊழியர் ஒருவருக்கு ஊழியம் வளராதபடி பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து மிகவும் சோர்வுற்றார். எதிர்ப்புகள் அதிகமானபடியால் தோல்வி மனப்பான்மையால் மிகவும் துவண்டு போனார். மனச்சோர்வு, கவலைகளிலிருந்து விடுபட எவ்வளவோ ஜெபித்தும் பயனில்லை.
சற்று அருகாமையிலிருந்த மற்றொரு மிஷனெரியோடு சில நாட்களை ஜெபத்தில் செலவிட தீர்மானித்து, அவரது இல்லத்திற்குச் சென்றார். வாசலில் தொங்கிக் கொண்டிருந்த "கர்த்தரை துதித்துப் பாடுங்கள்" என்ற வாசகம் இவரின் கண்களில் தென்பட்டது. தான் தேவனை நன்றியுடன் ஸ்தோத்திரித்து பாடி துதிக்கவில்லை என்பதை தேவன் அவருக்கு உணர்த்தினார். அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்று பரிசுத்த ஆவியானவரின் துணையுடன் மனமார தேவனை துதிக்கவும், ஸ்தோத்திரிக்கவும் தொடங்கினார். எல்லா மனச்சோர்வுகளும், தோல்வி மனப்பான்மைகளும், கவலைகளும் அவரை விட்டு விலகினது. விடுதலையுடன் புது உற்சாகம் பெற்றார். மன மகிழ்ச்சியுடன் ஊழியத்தைத் தொடர்ந்தார்.
2025 ம் ஆண்டின் இறுதி நாளில் நாம் இருக்கிறோம். இதுவரை பல்வேறு மனச்சோர்வுகள், கவலைகள், பொருளாதாரக் குறைவுகள், வியாதிகள் நம் வாழ்விலும், நம் பிள்ளைகளின் வாழ்விலும் நிகழ்ந்திருக்கலாம். எவ்வளவு ஜெபித்தும் சில காரியங்களில் மாற்றம் இல்லையே எனத் துவண்டுபோய் இருக்கிறீர்களா? பவுலும் சீலாவும் சிறைச்சாலைக்குள் தேவனைத் துதித்துப் பாடினது போல தேவனை துதிக்கத் தொடங்குங்கள்.
ஆம், எனக்கன்பானவர்களே, தோல்விகள் துயரங்கள் மத்தியிலும் "துதி என்னும் தூபம்" நம் வீடுகளிலிருந்து எழும்பட்டும். துதித்தலே தகும் என வேதம் கூறுகிறது. இதுவரைக் காத்த இம்மானுவேலர் இனியும் காக்கும் எபிநேசராக உங்களுடன் இருக்கிறார். துதித்துக் கொண்டே புதிய ஆண்டிற்குள் நுழைவோம்.
அல்லேலூயா.
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:-
புது வருடத்திற்கான இலக்குகள், திட்டங்களை தீர்மானிக்கும் தலைவர்களிடத்தில் தேவ சித்தம் வெளிப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864