By Village Missionary Movement
Tuesday, 23-Dec-2025இன்றைய தியானம்(Tamil) 23.12.2025
அடிமையின் ரூபம்
"அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும்... தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்" - பிலிப்பியர் 2:6,7
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக அடிமை வியாபாரம் வெகுவாக காணப்பட்டது. வெகு ஜனங்கள் தன் எஜமானனிடம் அடிமையாக வேலை செய்தனர். சிலர் பணத்திற்கு விற்கப்பட்டனர். இதைக்கண்ட மொரேவியன் மிஷனெரி ஒருவர் இந்த ஜனங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க வேண்டும், மெய்யான இயேசு கிறிஸ்துவை அறிவிக்க வேண்டும் என்ற பாரம் கொண்டார். பசிபிக் மகா சமுத்திரத்திலுள்ள மேற்கிந்திய தீவுகளுக்குச் செல்ல தீர்மானித்தார். தானும் ஒரு அடிமையாகாவிட்டால் அவர்களோடு இணைய முடியாது. எனவே அங்குள்ள எஜமான்களிடம் தன்னை ஒரு அடிமையாக ஒப்புக்கொடுத்து, அவரும் ஒரு அடிமையாகி, அடிமையின் ஆடை அணிந்து, அடிமைகளின் உணவை உண்டு அடிமைகளோடு அடிமையாய் வேலை செய்து வந்தார். அதனால் இரவும் பகலும் தம்முடன் சேர்ந்த அடிமைகளுக்கும் இரட்சிப்பின் செய்தியை அறிவித்து, அனேக அடிமைகளை கிறிஸ்துவின் அடிமையாக ஆதாயப்படுத்தினார்.
தேவன் மனிதர்களாகிய நம்மை நேசித்தபடியினால் தம் குமாரனை பரலோகம் விட்டு பூலோகம் வரச் செய்தார். தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். எத்தனை அன்பு பார்த்தீர்களா? இயேசு கிறிஸ்து எத்தனை காரியங்களை நமக்காக விட்டுக்கொடுத்திருக்கிறாரல்லவா?
இயேசு கிறிஸ்து விட்டு வந்தது "பரலோக மேன்மையை"! அது மாத்திரமல்ல "மனிதனாய்" தாழ்த்தினார், அதிலிருந்தும் கீழாக "அடிமையாய்" தன்னைத் தாழ்த்தி சீஷர்களின் கால்களை கழுவினார். இன்னும் ஒரு படி கீழே இறங்கி "குற்றவாளிகளில்" ஒருவராக சிலுவையில் அறையப்பட்டார். இதன் மூலம் தேவன் நம்மோடு இடைப்படும் காரியம் என்ன? பிறர் ஆண்டவரை அறிய எந்த நிலைக்கும் நம்மை தாழ்த்த ஆயத்தமாயிருக்க வேண்டும்.
தேவபிள்ளைகளே! நாம் நம் நிலையிலிருந்து இறங்கி வராமல், பிறரது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. அந்த மொரேவியன் மிஷனெரி, இயேசு கிறிஸ்து செய்தது போல தன்னை அடிமையாக ஒப்புக்கொடுத்தார். அவர் காலத்தில், அவரைக் கொண்டு தேவன் செய்ய திட்டமிட்டதை செய்து முடித்தார். நம்மைக் குறித்து என்ன? நமது மேன்மையை, அந்தஸ்தை, கௌரவத்தை, செல்வாக்கை விட்டு இறங்கி தேவசித்தம் நம்மில் நிறைவேற நம்மை ஒப்புக் கொடுப்போமா?
-Mrs. ஜோதி ஆனந்த்
ஜெபக்குறிப்பு:-
நம் வளாகத்தில் கிறிஸ்துமஸ் அன்று நடைபெறும் நற்செய்தி பெருவிழாவிற்கான தேவ சித்தம் தலைவர்களுக்கு வெளிப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864