By Village Missionary Movement
Thursday, 18-Dec-2025இன்றைய தியானம்(Tamil) 18.12.2025
வெளிச்சம் உதித்தது
"இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்:...“ - மத்தேயு 4:15
ஜேம்ஸ் ஹானிங்டன் இங்கிலாந்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். அவர் ஆப்பிரிக்காவிலுள்ள ஜாம்பியா நாட்டிற்கு மிஷனெரியாக சென்றார். அந்த நாட்டை ஐரோப்பியர்கள் அடிமை வியாபார மையமாக வைத்திருந்தனர். அங்குள்ள ஜனங்களின் வாழ்வாதாரம் மாறுவதற்கு ஜேம்ஸ் பலவாறு போராடினார். வியாதிப்பட்டதால் மீண்டும் இங்கிலாந்து திரும்பினார். பின்னர் உகாண்டாவிற்கு அனுப்பப்பட்டார். அவர் அனைத்து மக்கள் மீதும் பாரபட்சமின்றி அன்பைக் காட்டினார். அவரது வளர்ச்சியில் பொறாமை கொண்ட சிற்றரசன் இவரைக் கொல்லத் துடித்தார். எனவே ஹானிங்டனை பொது மேடையில் நிறுத்தி ஈட்டியால் குத்தி அவரைக் கொன்றான். ஜேம்ஸ் ஹானிங்டன் தரிசனத்தில் கண்டது போலவே இன்று உகாண்டாவில் 90% மக்கள் கிறிஸ்தவர்கள். "மிஷனெரிகள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகின்றார்கள்" என்ற கூற்று எவ்வளவு பெரிய உண்மை, உகாண்டாவில் மிஷனெரிகள் சிந்திய இரத்தம் வீண்போகவில்லை. ஜேம்ஸ் ஹானிங்டனின் தரிசனமும் விருதாய் போகவில்லை. இருண்ட கண்டத்தினுள் மெய்யான ஒளியாம் இயேசு இன்றளவும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார். ஆம், பாவ இருளில் அடிமைத்தனத்தில் இருப்போரை மீட்க அநேகரின் தியாகமும், தன்னலமற்ற செயலும் அஸ்திபாரமாகின்றன.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பிலும் இதே போன்ற சம்பவம் நடைபெற்றது. ஏரோது, தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலை செய்தான். கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்கு சொப்பனத்தில் காணப்பட்டு, நீ எழுந்து பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்துக்கு போ என்று சொன்னபடியே அவர்கள் வந்தார்கள். தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது, உலகத்துக்கு வெளிச்சம் தரக்கூடியதான இயேசு கிறிஸ்து பிறந்தார்.
இருளிலும், பாவத்திலும் வாழும் ஜனங்கள் மெய்யான ஒளியை கண்டிட ஆண்டவராகிய இயேசு இவ்வுலகில் மானிடனாய் அவதரித்தார். இன்றும் அவர் பிறந்த செய்தியை அறியாதோர் நம்மை சற்றி லட்சக்கணக்கில் உண்டே! அவர்களின் இருளான வாழ்வு மாற வேண்டுமானால் இயேசு கிறிஸ்து அவர்கள் உள்ளத்தில் பிறக்க வேண்டும். இதை வாசிக்கின்ற நீங்கள் இயேசுவுக்காய் பிரகாசித்து, மற்றவர்களுக்கு அவருடைய பிறப்பின் நற்செய்தியை அறிவிக்க ஆயத்தமாய் இருக்கின்றீர்களா? இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் உங்களது பங்களிப்பை கொடுக்க முன்வாருங்கள். சிந்திப்போம்! இயேகவுக்காய் உடனடியாய் செயல்படுவோம். பிறப்பின் நற்செய்தியை பரப்பிடுவோம்!
- Bro. சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:-
கிறிஸ்துமஸ்க்கு நம் டியூஷன் சென்டர் பிள்ளைகளுக்கு புத்தாடைகள் வாங்குவதற்கான தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864