By Village Missionary Movement
Wednesday, 17-Dec-2025இன்றைய தியானம்(Tamil) 17.12.2025
இடமில்லையா?
"...சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்" - லூக். 2:7
கிறிஸ்துமஸ் காலங்களில் நம் பள்ளிகளிலும், ஆலயங்களிலும் கிறிஸ்து பிறப்பைக் குறித்து நாடகம் போடுவார்கள் அல்லவா?அப்படி ஒரு பள்ளியில் ஒரு
நாடகம் அரங்கேற்றினர். அதில் ரமேஷ் என்ற மாணவன் சத்திரக்காரனாக நடித்தான். மரியாளுக்கு பிரசவ காலம் வந்தது. யோசேப்பு சத்திரத்துக்கு சென்று தங்குவதற்கு இடம் கேட்டார். அதற்கு அந்த சத்திரக்காரன் ரமேஷ் இங்கு இடமில்லை, மாட்டு கொட்டிலில் இடம் இருக்கிறது. அந்த இடத்தில் வேண்டுமானால் தங்கிகொள்ளலாம் என்று கூறவேண்டும். ஆனால் அந்த காட்சியில் நடித்த ரமேஷ் இடமில்லை என்று சொல்லத் தோன்றாமல், "இங்கு இடமில்லை ஆனால் என்னுடைய அறையில் இடம் இருக்கிறது. அதில் வந்து தங்கிக் கொள்ளுங்கள்" என்று கூறினான். இதை ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. கூடி இருந்தவர்கள் சிறிது நேரம் ஸ்தம்பித்து போய்விட்டார்கள். பிறகு அனைவரும் ஆரவாரமாக கைதட்டி ரமேஷை பாராட்டினர்.
லூக்கா 19ம் அதிகாரத்தில் சகேயு என்ற ஒரு ஆயக்காரனை பற்றி பார்க்கிறோம். இயேக கிறிஸ்து எப்படிப்பட்டவரோ என பார்க்க ஆவல் கொண்டான். அவன் குள்ளனானபடியால் அவன் இயேசு வரும் வழியில் முன்னாக ஓடி, ஒரு காட்டத்தி மரத்தில் ஏறி அவரைப் பார்த்தான். இயேசு அந்த மரத்தருகே வந்து, "சகேயுவே, இறங்கி வா" என்று கூப்பிட்டார். அவனும் ஆண்டவருக்கு உள்ளத்திலும் இல்லத்திலும் இடம் கொடுத்தான், ஆசீர்வதிக்கப்பட்டான்.
அன்று சத்திரத்தில் இடமில்லாதது போல இன்று அநேகருடைய உள்ளத்தில் இயேசுபாலகனுக்கு இடமில்லை. ஆனால் தேவகுமாரன் உன்னதங்களை விட்டிறங்கி, மண்ணுலகத்திற்கு மனிதனாக வந்தார். நம்மைத் தேடி வந்து நம்மில் அன்பு கூர்ந்து, நம்மை பாவத்திலிருந்து விடுவித்தார். மெய்யான ஒளியாக, சமாதான பிரபுவாக வந்தார், அவருக்கு இடம் கொடுக்கவில்லையென்றால் நாம் பரிதபிக்கப்பட்டவர்கள்.
இதை வாசிக்கிற உங்கள் உள்ளத்தில் இயேசு கிறிஸ்துவுக்கு இடம் கொடுத்துள்ளீர்களா? அல்லது இன்னும் உங்கள் இருதயக்கதவை தட்டிக்கொண்டு வெளியே நின்று கொண்டு தான் இருக்கிறாரா? கிறிஸ்து இல்லாத கிறிஸ்தவனாய் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேனா என நம்மை ஒரு நிமிடம் ஆராய்ந்து பார்ப்போம். மாட்டுத் தொழுவத்தைப் போன்ற நாற்றமுள்ள என் இருதயத்தை உம்மிடம் தருகிறேன். நீர் வாரும் என அழைப்போம். கிறிஸ்துவோடு கிறிஸ்துமஸை கொண்டாடுவோம்.
- Mrs. ஷீலா ஜான்
ஜெபக்குறிப்பு:-
கிறிஸ்துமஸ்க்கு நம் மிஷனெரிகளுக்கு நன்கொடைகள் வழங்க தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864