By Village Missionary Movement
Friday, 05-Dec-2025இன்றைய தியானம்(Tamil) 05.12.2025
உத்தரவு அருளும் தேவன்
“...கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு அருளினார்’’ - சங்கீதம் 99:6
பல வருடங்களுக்கு முன்பு மூத்த போதகர் ஒருவர் சென்னை பகுதியில் ஊழியம் செய்து வந்தார். அந்நாட்களில் மிகுந்த வறுமை, சாப்பிட ஒன்றுமில்லாத நிலை. அனுதின தேவைகள் கூட சந்திக்கப்படாமல் மிகவும் கஷ்டப்பட்டார். ஒரு நாள் தன் சக ஊழியர்களோடு இணைந்து தேவன் தன்நிலையை மாற்றும் படி காலை முதல் மாலை வரை உபவாசித்து ஜெபித்தார். ஜெபிக்கும் போது “இயேசுவே, எலியா என்ற தேவ மனிதனின் தேவையை காகத்தை அனுப்பி சந்தித்தீரே, எங்கள் தேவையை சந்திக்கும் படி ஒரு காகத்தை அனுப்பும்” என்று ஜெபித்தார்கள். அந்நேரம் ரோட்டில் நடந்து சென்ற குடிகாரர் ஒருவர் மிகுந்த எரிச்சலோடு, இந்த கிறிஸ்தவர்கள் எப்போதும் அல்லேலூயா அல்லேலூயா என்று கத்துவார்கள் என்று ரோட்டில் செத்துக் கிடந்த காக்காவை தூக்கி ஜெப அறைக்குள் வீசி எறிந்தார். ஜெபம் முடித்த ஊழியர்கள் உதவி செய்ய காக்காவை அனுப்பும் ஆண்டவரே என்று ஜெபித்தோம். ஆனால் செத்துப் போன காக்கா அல்லவா கிடக்கிறது என்று தூக்கி எறிய பார்த்த போது, அதின் வாயில் தங்க சங்கிலி தொங்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த போது நம் தேவன் எவ்வளவு நல்லவர், நம் ஜெபத்தைக் கேட்டு பதில் தந்தாரே என்று மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
இது போலவே வேதத்தில் ஆகார் என்ற பெண்ணும், மகன் இஸ்மவேலும் அதிகாலையில் ஒரு துருத்தி தண்ணீரோடும், சில அப்பத்தோடும் வனாந்தரத்திற்கு அனுப்பி விடப்பட்டனர். கையிலிருக்கும் அப்பமும் தண்ணீரும் தீர்ந்து போகிறது. மகன் தண்ணீர் கேட்கிறான். பசிக்குது என்கிறான். தன் கண் முன்னே மகன் படுகிற வேதனையை தாங்கிக் கொள்ள முடியாத அந்த தாய், பிள்ளை என் கண் முன்னே சாகிறதை நான் பார்க்க மாட்டேன் என்று தூரமாய் போய் உட்கார்ந்து அழுகிறாள். தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார். ஆகாரின் கண்ணீரைக் கண்டார். அந்நேரமே நீருற்றைக் காண்பித்தார். இருவரும் தண்ணீர் பருகி பிழைத்துக் கொண்டார்கள். அவ்விதமாய் தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
எனக்கு அன்பானவர்களே, நீங்களும் கூட இப்படிப்பட்ட பிரச்சனையோடு, தனிமையில் யாரும் இல்லாத நிலைமையில் இதை மிஞ்சி என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்று வேதனையோடு தவிக்கிறீர்களா? உங்கள் வேதனைகளையும் தனிமையையும் காண்கிற தேவன் ஒருவர் உண்டு. மனம் கலங்க வேண்டாம், உங்கள் கண்ணீரை அவர் துடைப்பார், வேதனைகளை மாற்றுவார். எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மாற்றி உங்களுக்கும் ஒரு அற்புதம் செய்வார்.
- Mrs. வளர்மதி பாஸ்கர்
ஜெபக்குறிப்பு:
கிறிஸ்துமஸ் நற்செய்தி பெருவிழா நிகழ்ச்சியில் பங்கு பெறுகிற ஒவ்வொருவரையும் தேவன் எடுத்து பயன்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864