By Village Missionary Movement
Wednesday, 03-Dec-2025இன்றைய தியானம்(Tamil) 03.12.2025
சில தடைகள் நன்மைக்கே
“தடைகளை நீக்கிப் போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்;...” - மீகா 2:13
ஒரு முறை மிகுந்த துக்கத்தோடு ஒரு தம்பதியர் தங்களுடைய மகளை அழைத்துக் கொண்டு எங்களிடம் ஜெபிக்க வந்தார்கள். அவர்களைப் பார்த்து உங்கள் மகளுக்கு திருமணம் நிச்சயம் பண்ணி விட்டீர்களே, என்ன ஆயிற்று ? என்று கேட்டோம். அப்பொழுது அவர்கள் மகளுடைய திருமணத்திற்காக சேர்த்து வைத்த நகை, பணத்தை வைத்து இவ்வளவுதான் எங்களால் கொடுக்க முடியும் என்று திருமணத்தை பேசி முடிவு செய்தோம். இப்பொழுது அவர்கள் திடீரென்று எங்களுக்கு இன்னும் பணம், நகை வேண்டும், இல்லையென்றால் இந்த திருமணத்தை நடத்த முடியாது என்று சொல்லிவிட்டார்கள். எங்களிடத்தில் அந்த அளவிற்கு கொடுக்க வசதி கிடையாது. மகளின் திருமணம் நின்று விடும் போல தெரிகிறது. என்ன செய்வதென்று எங்களுக்கு தெரியவில்லை என்று கவலையோடு சொன்னார்கள். அதற்கு நாங்கள் அவர்களை பார்த்து கவலைப்படாதீர்கள், திருமணத்திற்கு முன்பே இவ்வளவு பணம், நகை வேண்டுமென்று கட்டாயப்படுத்தி கேட்கிறார்களே, திருமணத்திற்கு பின் உங்கள் மகளை எப்படி நன்றாக வைத்துக் கொள்ளுவார்கள்? தேவ சித்தம் அறியாமல் அந்த திருமணத்தை ஏற்பாடு செய்ததினால், சிக்கலில் அகப்பட்டு கொள்ளக் கூடாது என்று தேவனே அதைத் தடை பண்ணியிருக்கிறார். தேவ சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து ஜெபித்து அனுப்பினோம். சில மாதங்களில் கர்த்தராகிய தேவன் அந்த மகளின் திருமணத்தை மிக அழகாக நடத்திக் கொடுத்தார்.
பெலிஸ்தருக்கும், இஸ்ரவேலருக்கும் யுத்தம் நடந்து கொண்டிருந்த நாட்களில், தாவீதும் யுத்தத்திற்கு சென்றிருந்தார். ஆனால் ஆகீஸ் தாவீதிடம் நீ தேவனுடைய தூதனைப் போல என் பார்வைக்குப் பிரியமானவன். ஆனாலும் இவன் எங்களோடே கூட யுத்தத்திற்கு வரக்கூடாது என்று சொல்கிறார். அப்படியே தாவீதும் யுத்தத்திற்கு போகவில்லை. தாவீது யுத்தத்திற்கு சென்றிருந்தால், சரியான நேரத்தில் சிக்லாக் பட்டணத்தில் இழந்த எதையும் அவரால் திரும்ப பெற்றிருக்க முடியாது. எனவே தேவனே தாவீதை யுத்தத்திற்கு செல்லாமல் தடை பண்ணினார்.
சில சமயங்களில் சில காரியங்கள் தடைப்படும். அதாவது திருமண காரியம், தொழில் காரியம் என்று சில காரியங்களுக்காக நாம் எடுக்கிற முயற்சிகள் தடைப்பட்டுக் கொண்டே இருக்கும். சில சமயங்களில் சாத்தான் தடை பண்ணுவான். சில சமயங்களில் கர்த்தர் தடை பண்ணுவார். இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். தேவசித்தம் இல்லாமல் காரியங்களை நடப்பித்து, நாம் சிக்கலில் சிக்கிக் கொள்ள கூடாது என்று தேவனே அந்த காரியத்தை தடுத்து நிறுத்தி, நம்மையும் சரியான வழியிலே நடத்துவார். உங்கள் வாழ்க்கையிலும் கூட தேவசித்தம் நிறைவேற உங்களை ஒப்புக்கொடுங்கள். கர்த்தராகிய தேவன் உங்களை அற்புதமாக நடத்துவார்.
- Bro. அருண் ஐயப்பன்
ஜெபக்குறிப்பு:
கிறிஸ்துமஸ் நற்செய்தி பெருவிழா நிகழ்ச்சி மூலம் அநேகர் ஆண்டவரின் அன்பை அறிந்து கொள்ள ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864