By Village Missionary Movement
Tuesday, 02-Dec-2025இன்றைய தியானம்(Tamil) 02.12.2025
பரிகாரியாகிய கர்த்தர்
“.. நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.” - யாத். 15:26
நான் LKG ல் சேர்ந்த ஒரு வாரத்தில், பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த போது கீழே விழுந்து விட்டேன். தலையில் அடிபட்டதால் மருத்துவர் தையல் போட்டார். அதன் பிறகு ஒருநாள் வீட்டில் நான் விளையாடிக்கொண்டிருந்தபோது எனக்கு fits வந்து விட்டது. என் பெற்றோர் மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள். ஒன்பது ஆண்டுகள் நான் மருந்து உட்கொண்டேன். எனக்கு சுகம் கிடைக்காதா என்று நான் ஏங்கினது உண்டு. நான் ஏழாம் வகுப்பு படித்தபோது ஒரு நாள் மதிய வேளையில் திடீரென்று எனக்கு fits வந்ததில் என் வலது கை செயலிழந்து உணர்வில்லாததாகி விட்டது. நான் இயேசப்பாவிடம் எனக்கு உதவி செய்யும், மீண்டும் அந்த கையில் உணர்வு வரட்டும் ஆண்டவரே என்று ஜெபித்துவிட்டு படுத்து விட்டேன். சற்று நேரத்தில் எழுந்து என் வலது கையை அசைத்துப் பார்த்தேன், அந்த கையில் உணர்வு இருந்தது. இந்த சம்பவம் என் வீட்டில் உள்ள தாய் தந்தை என் மூன்று சகோதரர் யாருக்கும் தெரியாது. இதை தேவ நாமம் மகிமைக்காக சாட்சி பகருகிறேன். அன்றிலிருந்து இன்று வரை எனக்கு fits வரவே இல்லை. இயேசு என் ஜெபத்தைக் கேட்டு சுகம் கொடுத்தார். தேவனுக்கே மகிமை!
லூக்கா 8:43-48 வரை உள்ள வசனங்களில் பன்னிரண்டு வருஷம் பெரும்பாடுள்ள ஸ்திரீயைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. அவள் பல வைத்தியர்களைப் பார்த்து மருந்து உட்கொண்டும் சுகமே கிடைக்கவில்லை. ஆஸ்தியை எல்லாம் செலவழித்து விட்டாள், மருத்துவமும் கைவிட்டது. ஒரு மனிதனாலும் அவளுக்கு சுகம் தர முடியவில்லை. அவள் இயேசுவை குறித்து கேள்விப்பட்டு அவர் செய்த அற்புதங்கள், வியாதியஸ்தர்களுக்கு சுகம் அளித்தது இவைகளை அவள் கேட்டபோது இயேசுவை விசுவாசித்தாள். மத்தேயு 9:21 ல் “நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன்” என்று தன் உள்ளத்தில் தீர்மானம் பண்ணினாள். அவள் தீர்மானித்தபடியே இயேசுவின் வஸ்திரத்தை தொட்டு சுகத்தைப் பெற்றுக் கொண்டாள்.
எனக்கு அன்பானவர்களே, இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையில் தன் இரத்தத்தைச் சிந்தினார், நம்முடைய நோய்களை சுமந்தார். அவர் தன் ஊழிய நாட்களில் தன்னிடத்தில் வந்தவர்களை சுகப்படுத்தினார். 12 வருடம் பெரும்பாடுள்ள ஸ்திரீக்கு சுகம் அளித்தவர் உங்களுக்கும் சுகம் தருவார். அவரை நோக்கி விசுவாசத்தோடு ஜெபிப்போம். “திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” (மத்.9:22). “விசுவாசித்தவளே பாக்கியவதி” (லூக்கா 1:45). “நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” (1 யோவான் 5:4). இயேசுவே, நீர் மாத்திரமே என்னை சுகப்படுத்த முடியும் என்று விசுவாசிப்போம். இயேசு நிச்சயம் சுகம் தருவார். ஆமென்.
- Sis. மீரா
ஜெபக்குறிப்பு:
கிறிஸ்துமஸ் நற்செய்தி பெருவிழா நிகழ்ச்சியை கர்த்தரை அறியாத பலர் பார்க்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864