By Village Missionary Movement
Monday, 01-Dec-2025இன்றைய தியானம்(Tamil) 01.12.2025
புலம்பல்கள்
"நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்" – பிலி. 4:6
என் அப்பா இராணுவத்தில் பணி செய்தவர். ஆகவே எளிதாக எதையும் கண்டு கலங்கவோ, புலம்பவோ மாட்டார். ஆனால் சாராயம் குடித்துவிட்டு வந்தால் புலம்பிக் கொண்டே இருப்பார். இன்றைய கிறிஸ்தவர்களின் நிலையை பார்க்கும் போது எனக்கு அது தான் ஞாபகம் வருகிறது. இயேசு கிறிஸ்து சர்வ வல்லவர் எனத் தெரிந்தும் கூட அநேக காரியங்களைக் குறித்துப் புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள்.
பெதஸ்தா குளத்தின் அருகேயுள்ள மண்டபத்தில் 38 வருஷமாய் வியாதி கொண்டிருந்த ஒருவன் படுத்திருந்தான். ஏனெனில் அந்தக் குளத்திற்கு ஒரு விசேஷம் உண்டு. ஒரு தூதன் குளத்தில் இறங்கி கலக்குவார். அப்போது முதலில் இறங்குபவர்கள் எப்பேர்பட்ட வியாதியஸ்தராயிருந்தாலும் சுகமடைவர். அதனால் அந்த குளத்தை சுற்றியுள்ள 5 மண்டபங்களில் குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள், வியாதிக்காரர் படுத்திருப்பர். இயேசு இந்த 38 வருடமாய் வியாதியாய் படுத்திருந்த மனுஷன் அருகே சென்று சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா என்கிறார். அவன், ஆம் என சொல்வதை விட்டு புலம்புகிறான். குளம் கலங்கும் போது என்னைக் கொண்டு போய் விட யாருமில்லை என்கிறான். இது போலத் தான் இன்றும் அநேகர் பிரச்சனை, வியாதி, பெலவீனம் வந்ததும் தேவனிடம் புலம்புகின்றனர். நாம் நன்றாய் இருக்கும் போது, அவர் சர்வ வல்லவர், அற்புதங்களை செய்பவர் என பேசுகிறோம். ஆனால் கஷ்டம், நெருக்கம் வந்து விட்டால் புலம்புகிறோம். அதுவே சில நாட்களாக, மாதங்களாக தொடரும் போது அதிகம் புலம்புகிறோம். ஆனால் பர்திமேயு குருடனை பாருங்கள். இயேசு கிறிஸ்து உனக்கு என்ன வேண்டும் என்கிறார். அதற்கு அவன் நான் பார்வையடைய வேண்டும் என்றான். இயேசு அவனிடம் உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து இயேசுவின் பின் சென்றான்.
அன்பானவர்களே! பாடுகளோடு, துக்கத்தோடு, வியாதியோடு இந்த வருடம் முழுவதும் புலம்பி கொண்டிருந்தது போதும். புலம்பலை விடுங்கள். இன்று இயேசு உங்கள் அருகில் வந்து உனக்கு என்ன வேண்டும் என கேட்கிறார். அவரிடம் உங்கள் பிரச்சனைகளை, பாடுகளை, மற்றவர்கள் உங்களை எள்ளி நகையாடியது என எதைக்குறித்தும் புலம்பாமல், பர்திமேயுவைப் போல ஒரே வரியில் எனக்கு இந்த பிரச்சனை நீங்க வேண்டும் எனக் கூறி விடுதலையைப் பெறுங்கள். விடுதலை தருகிறவர் உங்கள் அருகில் வந்து சொஸ்தமாக விரும்புகிறாயா? எனக் கேட்கிறார். எனவே புலம்பாமல் உங்கள் தேவையை இயேசுவிடம் கூறி விடுதலை பெறுங்கள்.
- Bro. டேவிட் கணேசன்
ஜெபக்குறிப்பு:
இம்மாத ஊழியங்களுக்காக, ஊழியர்களின் பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864