By Village Missionary Movement
Saturday, 29-Nov-2025இன்றைய தியானம்(Tamil) 29.11.2025
அன்பாயிருக்கிறாயா?
"...இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா..." - யோவான் 21:15
பதினைந்து வயது சிறுவன் ஒருவன் புற்று நோயால் பாதிக்கப்பட்டான். கீமோதெரப்பி என்னும் சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு தாங்கொண்ணா வேதனை, ஏனெனில் அவன் தலையிலிருந்த முடியெல்லாம் கொட்டி விட்டது. நோயின் முடிவு என்னவாகும் என்று அறியாத நிலையில் கிட்டத்தட்ட வழுக்கை தலையோடு பள்ளிக்கு சென்றால் வெட்கமாயிருக்குமே என்று தயங்கினான். ஆனால் பள்ளிக்குத் திரும்பிய முதல் நாளில் வியப்பு அவனுக்கு காத்திருந்தது. அவனுடைய வகுப்பில் பலர் மொட்டையடித்து வந்திருந்தனர். அவன் மீது அன்பு கொண்ட சிறுவர்கள் புதிய முறையில் தங்களது அன்பை காட்டினர். அந்த நண்பர்களை போலவே நாமும் நம் அன்பை பிறரிடம் காட்டவேண்டும்.
வேதத்தில் இதற்கு உதாரணமாக ஒரு மனிதனை சொல்ல முடியும். அவர் தான் பேதுரு. அந்த பேதுருவும், அவரோடுகூட இருந்தவர்களும் இரா முழுவதும் கடலில் வலை போட்டு, ஒரு மீனும் அகப்படாத சூழ்நிலையில், இயேசுவானவர் அவர்களிடம் "நீங்கள் படவுக்கு வலது புறமாக வலையைப் போடுங்கள்" என்றார். அவர்கள் இயேசுவின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்ததினால், திரளான மீன்கள் அகப்பட்டது. அன்று முதல் பேதுரு எல்லாவற்றையும் விட்டு விட்டு, இயேசுவின் பின் செல்ல துணிகிறார். இயேசுவுடன் இருந்து, அவர் செய்த அற்புதங்களை கண்ணாரக் காண்கிறார். அவருடன் ஜெபிக்க மலைக்குச் செல்கிறார். ஆனால் இயேசுவை சிலுவையில் அறைய வேண்டும் என்ற நிலை வந்த போது, எல்லாவற்றையும் இயேசுவுக்காய் விட்டு வந்த பேதுரு, இயேசுவையே மறுதலித்தார். மறுதலித்த பேதுரு பின்பு மனந்திரும்புகிறார். இயேசு மரித்தோரிலிருந்து எழுந்த பின்பு மூன்றாம் முறை தரிசனமான சூழலில், அவர்கள் போஜனம்பண்ணின பின்பு இயேசு சீமோன் பேதுருவை நோக்கி : இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா? என்றார். அதற்கு பேதுரு ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர் "என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக" என்றார்.
இதை வாசிக்கின்றதான அன்பான தேவஜனமே! பேதுருவை நோக்கி நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா? என கேட்ட ஆண்டவர், இன்று நம் ஒவ்வொருவரையும் நோக்கி கேட்கிறார். நம்மில் எத்தனை பேர் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியும். ஒவ்வொரு நாளும் இதை நாமே நம்மிடம் கேட்டு, நம்மை சரிசெய்ய பிரயாசப்படுவோம். அநேக நேரங்களில் நாம் ஆண்டவர் மீது செலுத்த வேண்டிய அன்பை, பொருட்கள் மீதோ, இல்லை வேற நபர்கள் மீதோ செலுத்திவிடுகிறோம். ஒரு வேளை நாம் இயேசுவின் மீது ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டுவிட்டோமோ? நம்மை நாமே ஆராய்ந்து சரிசெய்வோம். இயேசுவை முழுமனதோடு நேசித்து அவரிடம் அன்பு செலுத்துவோம் என்றால் அவர் எல்லாவற்றையும் நமக்கு தர வல்லவராயிருக்கிறார்.
- Bro. முரளி கிதியோன்
ஜெபக்குறிப்பு:-
கைப்பிரதிகளை பெற்றவர்களின் பெயர்கள் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864