By Village Missionary Movement
Friday, 28-Nov-2025இன்றைய தியானம்(Tamil) 28.11.2025
அகந்தையும் அழிவும்
"...விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை" - நீதி. 16:18
நம்மிடம் எப்போதுமே கடவுளுக்கேற்ற பயமும், மனத்தாழ்மையும் இருக்க வேண்டும். நாம் அகந்தையான மனநிலையோடு காணப்பட்டால், அது நம்மை அழிவுக்கு நேராய் கொண்டு சென்றுவிடும் என்பதற்கான ஒரு சில எடுத்துக்காட்டுகளை திருமறையில் இருந்து பார்ப்போம்.
முதலாவதாக ஆகார், நமக்கு தெரிந்தபடி அவள் அடிமைப்பெண். ஆனால் அவள் கர்ப்பந்தரித்த போது, தன்னுடைய எஜமாட்டியை அற்பமாக எண்ணினாள். இனி நானே எஜமானி என்ற மனநிலையை அடைந்தாள். விளைவு ஆபிரகாமால் வீட்டை விட்டு குழந்தையோடு விரட்டப்பட்டாள். வசதியான இடத்திலிருந்து வனாந்தரத்திற்கு துரத்தப்பட்டாள்.
இரண்டாவதாக உசியா ராஜா, மிகவும் இளம் வயதில் தன் 16 ம் வயது முதல் அரசாளுகிறார். பல போர்களில் வெற்றி பெறுகிறார், கோபுரங்களை கட்டுகிறார், விவசாயத்தில் புரட்சி செய்கிறார். அவர் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவர் காரியங்களை வாய்க்கச் செய்தார் ( 2 நாளாகமம் 26:5) என்று வாசிக்கிறோம். அவர் பலப்பட்டபோது, தனக்குக் கேடுண்டாகுமட்டும், அவருடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து... தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தார். அதனால் கிடைத்த தண்டனை, வாழ்நாள் முழுவதும் குஷ்டரோகியாய் தனியே வாழ்ந்தார். கர்த்தருடைய ஆலயத்துக்கு புறம்பாக்கப்பட்டார்.
மூன்றாவதாக நேபுகாத்நேச்சார், மிகுந்த வல்லமை கொண்டவராக இருந்தார், மிகப்பெரிய வெற்றிகளைக் கண்டார். ஒருநாள் அரமனைமேல் உலாவிக் கொண்டிருக்கும் போது, "இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமை பிரதாபத்துக்கென்று,... நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா" என்று கூற, அந்த நிமிடமே ஆண்டவரின் கோபம் அவர் மீது வந்தது. மனுஷரினின்று தள்ளப்பட்டார். மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தார். அவருடைய தலைமயிர் கழுகுகளுடைய இறகுகளைப்போலவும், அவருடைய நகங்கள் பட்சிகளுடைய நகங்களைப்போலவும் வளருமட்டும் அவர் சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது (தானியேல் 4 :33). தன் மகிமை முழுவதும் இழந்து போனார்.
பிரியமானவர்களே, நாம் நிற்பதும் நிர்மூலமாகாதிருப்பதும் அவருடைய கிருபை என்பதை உணர்ந்தவர்களாக, "தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்" (யாக்கோபு 4 : 6). "பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் அறுத்துப் போடுவார் (சங்கீதம் 12 : 3) என்ற வசனங்களை மனதிற்கொண்டு, பணிவுடன் நடந்து கொள்வோம். ஆண்டவரின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்வோம்.
- Sis. புஷ்பம்
ஜெபக்குறிப்பு:-
50,000 கிராமங்களில் சுவிசேஷம் அறிவிக்கும் திட்டத்தில் நம்மோடு இணைந்து செயல்படும் தன்னார்வ ஊழியர்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864