By Village Missionary Movement
Saturday, 22-Nov-2025இன்றைய தியானம்(Tamil) 22.11.2025
இயேசுவின் கழுதை
"...ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக் கண்டு, அதை அவிழ்த்தார்கள்" - மாற்கு 11:4
நான் ஆண்டவரை அறியாத குடும்பத்தில் பிறந்தேன். என்னுடைய தகப்பனார் வியாதிப்பட்டு, மிகுந்த பெலவீனத்துடன் காணப்பட்டார். இருளில் வாழ்ந்து வந்த எங்களுடைய குடும்பத்துக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டதினால், நாங்கள் குடும்பமாக இயேசுவை ஏற்றுக் கொண்டு திருமுழுக்கு பெற்றுக்கொண்டோம். அதன் பின்பு, முழுநேர ஊழியராக கர்த்தருடைய ஆலயப்பணியை செய்யும் போதகராக என்னை அர்ப்பணித்தேன். தாயின் கருவில் உருவாகும் முன்னே என்னை தெரிந்துக்கொண்ட ஆண்டவர் என்னிடம், உன்னுடைய பணி இதுவல்ல, என்னைப் பற்றி அறியாத பல கோடி மக்களுக்கு என்னை அறிவிக்கவே உன்னைத் தெரிந்துக்கொண்டேன் என்று சொன்னார். ஆண்டவர் என்னிடம் வட இந்திய பகுதிக்குச் சென்று இயேசுவை அறிவித்திட உணர்த்தினார். உடனே அங்கு சென்று, அங்குள்ள மொழியை கற்றுக்கொண்டேன். ஒரு குறிப்பிட்ட மிஷனெரி ஸ்தாபனத்தில் இணைந்து, பல ஆண்டுகள் வட இந்தியாவில் ஊழியராக பணியாற்றினேன். அதன் விளைவு 2,000 துக்கும் அதிகமான மக்களை இயேசுவினண்டை நடத்தவும், 37 சபைகளில் ஆராதனை நடத்தவும், அநேகருடைய கட்டுகளை கட்டவிழ்க்கவும் தேவன் உதவி செய்தார். அதற்கு இயேசுவின் வழி நடத்துதலே காரணம்.
ஆண்டவராகிய இயேசு தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி: உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; அதில் பிரவேசித்தவுடனே, மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள் என்றார். அவர்கள் போய், வெளியே இருவழிச் சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக் கண்டு, அதை அவிழ்த்து அவரிடம் கொண்டு வந்தார்கள். ஆம், நாமே அந்த கழுதை. அவரை சுமக்கும் கழுதைகளே!
பிரியமான தேவஜனமே! என்னை பயன்படுத்திய கர்த்தர் உங்களையும் பயன்படுத்துவார். நீங்கள் யாராயிருந்தாலும், கர்த்தரை சுமக்க உங்களை ஒப்புக் கொடுத்து அர்ப்பணித்தால் போதும். பூமிக்கு உப்பாகவும், உலகத்துக்கு ஒளியாகவும் இயேசுவுக்குச் சாட்சியாகவும் வாழ முயற்சிப்போம். ஒரு புறம் கட்டப்பட்டிருந்த கழுதையைப் போல இருளிலும், பாவத்திலும், சாபத்திலும் அநேகருடைய வாழ்க்கை கட்டப்பட்டிருக்கிறது. மற்றொரு புறம் இயேசுதான் இரட்சகர் என்பதை இது வரையிலும் அறிந்திடாத கூட்டம். இப்படிப்பட்டதான கட்டப்பட்ட ஜனங்களுக்கு சுவிசேஷம் சொல்ல நாம் செயல்படுவோம். "இயேசு" என்ற நாமம், அவர்களுடைய கட்டுகளை கட்டவிழ்க்கும் வல்லமையுள்ள நாமமாகச் செயல்படுவதைக் கண்டு நாம் அவரையே மகிமைப்படுத்துவோம்.
- V.P. பச்சையமுத்து
ஜெபக்குறிப்பு:-
எழுப்புதல் வாலிபர் முகாமில் ஊழியத்திற்கென்று அர்ப்பணித்த பிள்ளைகள் வாய்ப்புள்ள இடங்களில் ஊழியம் செய்ய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864