By Village Missionary Movement
Wednesday, 19-Nov-2025இன்றைய தியானம்(Tamil) 19.11.2025
கேள்வி கேட்காத கீழ்ப்படிதல்
"ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து,..." - ஆதி. 26:4
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செய்திருந்தார். விளம்பரத்தைப் பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர். இரண்டு நாட்கள் அவர் சொன்ன வேலையைச் செய்தார்கள். ஆனால் மறு நாளிலிருந்து அவர்கள் வேலைக்கு வரவில்லை. கடைசியாக ஒரு வாலிபன் வேலைக்கு வந்தான். அவனிடம் அந்த செல்வந்தர் அங்கு கிடந்த ஜல்லி கற்களை எடுத்து சற்று தொலைவில் போய் கொட்டச் சொன்னார். மறுநாள் அதை அள்ளி ஏற்கனவே இருந்த இடத்திலேயே போய் போடச் சொன்னார். அவ்வாறு ஒரு வாரம் முழுவதும் செய்யச் சொன்னார். பின்பு ஞாயிறு உனக்கு விடுமுறை என்றார். ஒரு வாரத்திற்கான சம்பளத்தையும் கையில் கொடுத்து விட்டார். திங்கட்கிழமை அந்த வாலிபன் வருவான் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவ்வாலிபனோ திங்கட்கிழமை காலை சொன்ன நேரத்திற்கு வேலைக்கு வந்து விட்டான். ஏன்? எதற்கு? என்று எந்தக் கேள்வியும் கேட்காமல், எஜமானின் கட்டளைக்கு உண்மையாய் கீழ்ப்படிந்ததினால் அந்த வாலிபனுக்கு அவன் படிப்பிற்கும், திறமைக்கும் ஏற்ற உயர்ந்த வேலையை கொடுத்தார். பல இலட்ச ரூபாய் கணக்கு வழக்குகளைப் பார்க்கவும், முக்கிய பொறுப்புகளை அவனிடம் கொடுத்து இரகசியம் காக்கவும் நியமித்தார்.
பூமியில் பாவம் பெருகினதினால் தேவன் இவ்வுலகை அழிக்க சித்தம் கொண்டவராகி, நோவா என்கிற தேவ மனிதனுடன் பேசுகிறார். தொடர் மழை பெய்யப் போகிறது, அந்த அழிவிலிருந்து உன்னையும் உன் குடும்பத்தையும் காக்க ஒரு பேழையை செய் என்றார். நோவா எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் கர்த்தர் சொன்ன அளவின் படி அப்படியே செய்தார். அழிவிலிருந்து காக்கப்பட்டார்.
கர்த்தர் ஆபிரகாமிற்கு 100 வயதில் பிறந்த பிள்ளையை மோரியா என்ற மலைக்கு கொண்டு போய் பலியிடச் சொன்னார். அப்படியே கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்த ஆபிரகாம் தன் மனைவியிடம் கூட சொல்லாமல், எங்கே அவளிடம் சொன்னால் அழுது தன்னை தடுத்து விடுவாளோ என்று எண்ணி வேலைக்காரரில் இரண்டு பேரை கூட்டிக் கொண்டு, அதிகாலமே புறப்பட்டுச் செல்கிறார். கேள்வி கேட்காத கீழ்ப்படிதலை கர்த்தர் ஆசீர்வாதமாக மாற்றினார். ஆபிரகாம் கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிந்து போகும் இடம் இன்னது என்று அறியாமலேயே தேவனின் வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிந்து, நமக்கெல்லாம் முன்மாதிரியாக உள்ளார்.
ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் அரைகுறையான கீழ்ப்படிதல் இருக்குமானால் அது ஆபத்தானது. நாமும் அனுதினமும் தேவசத்தம் கேட்டு தேவசித்தம் செய்கிறவர்களாக மாறுவோம், தேவன் தரும் மேலான ஆசீர்வாதங்களை பெற்று மகிழ்வோம்.
- Mrs. செல்வா பெஞ்சமின்
ஜெபக்குறிப்பு:-
கண்மணியே கேள், யோசுவாவே எழும்பு பத்திரிக்கை மூலம் அநேக வாலிபர்கள் கிறிஸ்துவுக்காய் செயல்படுகிறவர்களாய் மாற ஜெபியுங்கள். .
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864