By Village Missionary Movement
Monday, 07-Jun-2021இன்றைய தியானம்(Tamil) 07-06-2021
அன்பின் அக்கினி
“கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது;…” – 2 கொரிந்தியர் 5:14
ரஷ்ய சிறைச்சாலையில் கிறிஸ்துவின் சுவிசேஷத்தினிமித்தம் கட்டப்பட்டவராய் தன் வாழ்வின் 20 வருடங்களை இருட்டறையில் கழித்தார் பிஷப் விக்டர் பேலிக். ஒவ்வொரு நாள் மாலையிலும் சிறிய வைக்கோல் மெத்தை ஒன்று அவரின் சிறைச்சாலை அறையில் போடப்பட்டு 7 மணி நேரம் அதில் உறங்க அனுமதிக்கப்படுவார். மீதி 17 மணி நேரமும் அந்த சிறிய அறையினுள் நடந்து கொண்டே இருக்க வேண்டும். நின்றாலோ அல்லது கீழே விழுந்தாலோ காவலர்கள் அடித்து கொடுமைப்படுத்துவார்கள். 20 வருடங்கள் இப்படிப்பட்ட கொடுமையை சகித்த பின்னும் மேலும் 4 ஆண்டுகள் பூமியின் உறைபனி குளிர்பிரதேசமான சைபீரியாவின் மைனஸ் 60꣠C வெப்பநிலையில் உடுத்த உடையும் இல்லாமல், பனியில் உறையாமல் உயிரோடு இருந்ததற்குக் காரணம், தன்னை கொடுமைப்படுத்தினவர்கள் மேல் எழுந்த கசப்பு, வெறுப்புகளை உருக்கும்படியாக தேவ அக்கினியை தனக்குள் அனுமதித்ததே! என்று கூறுகிறார். தனது உள்ளத்தில் இயேசுவானவர் கொளுத்தின அன்பின் அக்கினியின் அனலைக் கொண்டு சைபீரியாவின் உறைபனியையும் அவரால் உருக்க முடிந்தது.
வேதாகமத்திலே, ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் பொற்சிலையை வணங்காதவர்கள் எரிகிற அக்கினி சூளையிலே போடப்படுவார்கள் என்ற உத்தரவு வந்த போதும், தேவன் மேல் வைத்த உறுதியான விசுவாசத்தினால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள், “நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களை விடுவிக்க வல்லவர்; அவர் எங்களை விடுவித்தாலும், விடுவிக்காமற்போனாலும் நாங்கள் சிலையை வணங்கமாட்டோம்” என்று சொன்ன அவர்கள் விசுவாசம் தான் எத்தனை அருமை! அக்கினிச்சூளையில் போடப்பட்ட வேளையிலும் தன்னுடையவர்களை விடுவிக்கும்படி அக்கினியின் நடுவில் இறங்கி வந்து விடுவித்த தேவனின் வல்லமை தான் எத்தனை பெரிது!
“அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப் பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்” (1பேதுரு 1:7) அக்கினியில் போடப்படுகிறதினால் உலோகம் சுத்தமடைகிறது, அது வலுவடைகிறது. அதுபோல நம்முடைய விசுவாசம் சோதிக்கப்படும்போது நாம் எப்படி இருக்கிறோம்? பிரச்சனைகளும், போராட்டங்களும் நம்மை நெருக்குகிற வேளைகளில் நாம் மனமுடைந்து போகிறோமா? இல்லை, கிறிஸ்துவின் அன்பினால் நெருக்கப்பட்டு நம் உள்ளத்தில் பற்றி எரிகிற தேவ அக்கினியால் பிரகாசமடைந்து, பரிசுத்தமாக்கப்பட்டு விடுவிக்கப்படுகிறோமா? எந்த சூழ்நிலையும் கிறிஸ்துவின் மேலுள்ள அன்பை விட்டு நம்மை பிரிக்காதபடி காத்துக் கொள்கிறவர்களாகவும், தேவ அன்பின் ஜீவாலை நமக்குள் பற்றி எரிகிறவர்களாகவும் நாம் காணப்படுவோம். ஆமென்.
- Mrs. வசந்தி ராஜமோகன்
ஜெபக்குறிப்பு:
Lock down காரணமாக பள்ளிக்குச் செல்லாமல் வீடுகளில் இருக்கும் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களது எதிர்க்காலத்திற்காக ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250