By Village Missionary Movement
Saturday, 15-Nov-2025இன்றைய தியானம்(Tamil) 15.11.2025
புடமிடுதல்
"அநேகர் சுத்தமும், வெண்மையுமாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள்;..." - தானியேல் 12:10
ஆண்டவர் தம்முடைய பிள்ளைகளைப் புடமிடுவதில் இரண்டு விதங்கள் உண்டு. ஒன்று ஆவிக்குரிய வாழ்வில் அவர்களிடம் உள்ள சில குறைபாடுகள் நீங்க அவர்கள் சுத்திகரிக்கும்படி, சில அக்கினி சோதனைகளை நம்முடைய வாழ்வில் ஆண்டவர் அனுமதிப்பார். மற்றொன்று, நம்முடைய விசுவாசத்தில் நாம் நிலைநிற்போம் என்பதை பிறர் உணரும்படியாக நாம் புடமிடப்படுகிறோம். ஒரு பொருள் தீயினால் பாதிக்கப்படாது என்பதை நிரூபிக்க அப்பொருள் தீயினூடே சென்று, பாதிப்பற்று வெளியே வரவேண்டும் இல்லையா? அது போன்றே நாமும், நம்முடைய விசுவாசமும் சோதிக்கப்பட்டு பின்னர் நாம் பொன்னாக விளங்குவோம்.
மேற்கண்ட வசனம் அநேகர் சுத்தமும், வெண்மையுமாக்கப்பட்டு, புடமிடுதலுக்கு உள்ளாவர் என்றே கூறுகிறது. நம்மில் ஆவிக்குரிய பிரகாரமாக உருவாக்கப்பட்டுள்ள தாழ்மை, பொறுமை, அன்பு போன்ற ஆவிக்குரிய குணங்கள் நம்மிடம் எப்போதும், எச்சூழ்நிலையிலும் வெளிப்படும் என்பதை பிறருக்கு காட்டவே, சில வேளைகளில் கடவுள் இத்தகைய புடமிடுதல்களை நம்முடைய வாழ்வில் அனுமதிக்கிறார்.
யோபுவை பாருங்கள், எத்தனை பிரச்சனைகள் வந்த போதும், தன் வாயினால் ஆண்டவரை தூஷிக்காதபடி, ஆண்டவருக்கு ஸ்தோத்திரங்களை செலுத்தினார். பிலிப்பியர் 2.8 ல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மைத் தாழ்த்தினார் என்று கூறப்படும் பொழுது, அவர் அதற்கு முன் தாழ்மையாக இல்லை என பொருள் இல்லை. அவருக்கு வந்த சோதனைகளின் மத்தியிலும், பெரும் துன்பத்தின் மத்தியிலும் அவர் பொறுமையுடனும், தாழ்மையுடனும் இருந்ததை நாம் புரிந்துக் கொள்ளும்படியாக எழுதப்பட்டுள்ளது. பல்வேறு புடமிடுதலுக்கு பின் அவருடைய பெயர் வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழானவர் யாவருடைய முழங்கால்களும் முடங்கும்படியாக இயேசுவின் நாமம் உயர்த்தப்பட்டது. எப்பொழுதும் புடமிடுதல் தானா? என வருத்தப்பட வேண்டாம். சிலுவைக்கு பின்னே மகிமையான உயிர்த்தெழுதல் உண்டு. ஆம், இழந்து போன எல்லா ஆசீர்வாதங்களையும் நாம் மீண்டும் சுதந்தரிப்போம். "அவர்களைக் குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." (எரேமியா 32:42)
பிரியமானவர்களே! தேவனால் நாம் புடமிடப்பட்டபின் பொன்னாக விளங்க முடியும். நம் சுபாவம் மென்மையாய் விளங்க தேவன் கிருபை செய்வாராக.
- Rev. எலிசபெத்
ஜெபக்குறிப்பு:-
பள்ளி ஊழியங்களில் கர்த்தரின் வார்த்தையைக் கேட்ட பிள்ளைகளின் உள்ளங்களில் வார்த்தை கிரியை செய்ய. ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864