By Village Missionary Movement
Friday, 14-Nov-2025இன்றைய தியானம்(Tamil) 14.11.2025
பரலோகராஜ்யத்தில் பெரியவன்
"...ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை (இயேசுவை) ஏற்றுக்கொள்ளுகிறான்." - மத்தேயு 18:5
இன்று சிறுவர் தினம். இன்றைய தினத்திலே, தேவன் சிறுபிள்ளைகளை எப்படி பார்க்கிறார் என சிந்திப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து பூமியில் வாழ்ந்து ஊழியங்களை நிறைவேற்றின நாட்களில், "சிறு பிள்ளைகள் என்னிடத்திற்கு வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்" என்ற அன்பான கட்டளையை நமக்குக் கற்றுத் தந்திருக்கிறார். மேலும் மத். 18 ம் அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ள சத்தியத்தின்படி, ஒவ்வொரு தனிமனிதனும் சிறுபிள்ளைகளைப்போல ஆனால் தான் பரலோக ராஜ்யத்திலேயே பிரவேசிக்க முடியும். ஆகையால் இந்தப் பிள்ளையைப் போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான் என்று கூறுகிறார். இது சிறுகுழந்தைகளைப் போன்ற கபடற்ற வாழ்விற்கு நம்மை அழைக்கின்றது. மேலும் ஒரு பிள்ளையை இயேசுவின் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொண்டாலும், அது அவரையே நாம் ஏற்றுக்கொள்ளுவதாக வேதாகமம் கூறுகிறது.
எனவே எவ்விதப் பாகுபாட்டிற்கும் இடமளிக்காமல், நியாயம் தீர்க்காமல், பிள்ளைகளைப் பராமரிக்கும் பணியில் இருக்கும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆலோசகர்கள், அவர்களை இருக்கும் வண்ணமாகவே அன்போடு அரவணைத்து நல்வழிப்படுத்த அழைக்கப்படுகிறோம். மேலும் இதே அதிகாரத்தில் அவர்களுக்கு தவறான முன்மாதிரியினிமித்தம் நாம் இடறல் உண்டாக்கக்கூடாதென்றும், அவ்வாறு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் எந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு பிள்ளையையும் அற்பமாய் எண்ணிவிடக்கூடாதென்றும் எச்சரிப்பதோடு, அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
தனது பள்ளிப்பருவத்தில் குறைத்து மதிப்பிடப்பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பின்னாளில் மிகப்பெரிய விஞ்ஞானியாக மாறி பல சாதனைகள் புரிந்தார். எனவே ஒவ்வொரு பிள்ளையின் தனித்துவத்தையும் அறிந்து, ஊக்குவித்து, மேன்மையடைய வழிவகை செய்ய நாம் முற்படுவோம். மேலும் நம் கரங்களில் கொடுக்கப்படுகிற சிறுவர் சார்ந்த ஊழியங்களில் மந்தைக்கு முன்மாதிரியைக் காண்பித்து, கட்டாயமாய் அல்ல மனப்பூர்வமாயும், பொருளாதார ஆதாயத்திற்காகவும் அல்ல, உற்சாக மனதோடு அவர்களைப் பாதுகாத்து, பராமரித்து, பகிர்ந்தளித்து, சுவிசேஷத்தைப் பறைசாற்றுவோம்.
- Mrs. மெர்ஸி அலெக்ஸாண்டர்
ஜெபக்குறிப்பு:
பள்ளி ஊழியங்கள் மூலம் நாம் சந்தித்த பிள்ளைகள் தேவ அன்பிற்குள் வளர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864