By Village Missionary Movement
Thursday, 13-Nov-2025இன்றைய தியானம்(Tamil) 13.11.2025
"...ஒருவன்...தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்" - மத்தேயு 16:24
ஆயர் ஒருவர் தனது சபையில் சவாலான செய்தியொன்றை அளித்தார். "சீனாவிற்கு மிஷனெரியாகப் போகப் போவது யாரோ? மக்கள் கிறிஸ்துவை அறியாமல் மரிக்கிறார்கள். உன்னை நீ கொடுப்பாயா? என்று. ஒரு விதவை தாய் ஆயரிடம் வந்து, "ஐயா, நான் என் மகளை சீனாவிற்கு மிஷனெரியாக அனுப்புகிறேன்" என்றார்கள். ஆயர், அம்மா உங்கள் மகள் உங்களுக்கு உதவியாகயிருக்க வேண்டும், நீங்கள் வயதானவர்கள் என்றார். அவர்களோ ஐயா, கர்த்தர் என்னைப் பார்த்துக் கொள்வார். எனக்கு ஐந்து பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றார்கள். அந்த தாயின் மூத்த மகள் சீனாவிற்கு மிஷனெரியாக அனுப்பப்பட்டார். அங்கு ஊழியம் செய்த அவளை சீனர்கள் கொன்று போட்டுவிட்டனர். அந்த விதவை தாய் அழுதுக் கொண்டே, என் மகளுக்காக நான் அழவில்லை, சீன மக்களுக்காக அழுகிறேன் என்றார்கள்.
மீண்டும் தனது இரண்டாவது மகள், மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது மகள்களையும் சீனமக்களின் இரட்சிப்புக்காக, அவர்கள் எப்படியாகிலும் இயேசுவை கண்டு கொள்ள வேண்டும் என்று மிஷனெரியாக அனுப்பினார்கள். நடந்தது என்ன? அந்த சீனர்கள் அவர்களையும் ஈவு இரக்கமில்லாமல் கொன்று போட்டார்கள். இப்பொழுது, அந்த விதவை தாய் ஐயா! என்னை அனுப்புங்கள் என்று சொன்னார்கள்.
திடுக்கிட்டு போன ஆயர் பின்பு அவர்களையும் அனுப்பினார். சீன மண்ணில் கால் வைத்து இயேசு கிறிஸ்துவின் அன்பை மக்களிடம் சொல்ல ஆரம்பித்தார்கள். அந்த சீனர்கள் அவர்களை பார்த்தவுடன், "உங்கள் சாயலிலிருந்த ஐந்து மகள்களையும் நாங்கள் கொன்று போட்டோம் என்று அறிந்தும், பயப்படாமல், எங்களிடம் வந்து அவர்கள் சொன்ன இயேசுவை எங்களுக்குச் சொல்கிறீர்களே ஏன்?" என்றார்கள். அப்பொழுது அந்த விதவைத்தாய், "உங்களை நான் நேசிக்கிறேன். நீங்கள் நரகம் போவதை நான் விரும்பவில்லை" என்றார்கள். அதை கேட்ட அந்த சீனர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. இயேசு கிறிஸ்துவின் அன்பை அந்த தாயிடம் கண்டார்கள். அந்நாள் முதற்கொண்டு கூட்டகூட்டமாக இயேசுவிடம் மனந்திரும்பினார்கள்.
எனக்கு பிரியமான தேவமக்களே, "இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்" (ஏசா. 43:21). நாம் எப்படி? தன் ஐந்து பிள்ளைகளையும் இயேசுவின் சேவைக்காக தியாகம் செய்த தாய் கடைசியாக தானும் இயேசுவுக்காக மரிப்போம் என்று அர்ப்பணித்தார்கள். இது தான் ஊழியத்தின் அர்ப்பணிப்பு. நாமும் அர்ப்பணிக்கப்பட்டவர்களாகயிருந்தால் மாத்திரமே இப்படிப்பட்ட ஊழியத்தை நிறைவேற்றமுடியும். ஆமென்! அல்லேலூயா! கர்த்தர் ஆசீர்வதிப்பாராக!
"இயேசு தன் உயிரையே
உனக்காக கொடுத்தார்
அவருக்காக உன் வாழ்க்கையை கொடுப்பாயா?"
- Mrs. எப்சிபா இம்மானுவேல்
ஜெபக்குறிப்பு:-
மாதந்தோறும் வீட்டு ஜெபக்குழுக்கள் நடைபெற வீட்டை கொடுத்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட. ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864