By Village Missionary Movement
Friday, 07-Nov-2025இன்றைய தியானம்(Tamil) 08.11.2025
செயல்படும் கர்த்தர்
"கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்;..." - சங்கீதம் 138:8
பாபு கல்லூரி படிப்பை முடித்ததும் வேலைக்காக கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி இன்டர்வியூவில் கலந்து கொண்டே இருந்தான். அவனோடு படித்தவர்கள் சிலர் மேற்படிப்பிற்குச் சென்றனர். சிலர் கிடைத்த சிறு சிறு வேலையில் சேர்ந்தனர். ஆனால் பாபு தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தான். எவ்வளவோ முயற்சித்தும் வேலை கிடைக்காததால் சோர்ந்து போன பாபுவை தந்தை அழைத்து, அருகில் அமரச் செய்தார். பாபுவிடம் மகனே, "குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்" என்ற வசனத்தை மனதில் கொண்டு ஜெயம் கொடுக்கிற தேவனை உறுதியாய் பற்றிக்கொள். உனக்கு நல்ல வேலையை தருவது தேவனுக்கு இலேசான காரியம் என்றார். தந்தையின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு பாபுவும் அவ்வாறே தினமும் ஜெபிக்க ஆரம்பித்தான். சில நாட்களிலேயே பாபுவுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தது. பாபுவும் மகிழ்ச்சியுடன் தேவனை ஸ்தோத்தரித்தான்.
பவுல் பிலிப்பி பட்டணத்தில் வந்தபோது ஓய்வு நாளில் பட்டணத்துக்கு வெளியே ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம் பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து ஜெபித்து உபதேசிக்கிறார். தேவன் பவுலின் உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருந்த லீதியாளின் உள்ளத்தைத் திறந்தார். வசனம் அவளில் கிரியை செய்து இரட்சிக்கப்பட்டாள். அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெறுகின்றனர். வழக்கமாக கூடி ஜெபிக்கும் இடத்தில் தேவன் செயல்படுகிறார். நாம் தேவனுக்காக தொடர்ந்து செயல்படும்போது அவரும் நமக்காக செயல்படுகிறார். ஜெபிப்பதை நாம் வழக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். வழக்கமாக செய்யும் காரியம் என அலட்சியமாக இல்லாமல், சோர்ந்து போகாமல் தொடர்ந்து ஜெபம் செய்யும்போது நாம் எதுவும் ஸ்பெஷல்லா செய்ய வேண்டியதில்லை. தேவனே நமக்காக அங்கு செயல்படுவார். ஜெபிக்க, வேதத்தை வாசித்து அதை உபதேசிக்க வேண்டியது நம் கடமையாகும். கிரியை செய்வது தேவனே. அவரே நாம் வழக்கமாய் செய்யும் காரியத்தில் ஒரு மாறுதலை, வித்தியாசத்தைக் காணச் செய்வார்.
அன்பானவர்களே, நீங்களும் கூட ஜெபிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். தேவன் செய்யும் நன்மையை சுதந்தரியுங்கள். அவற்றை மற்றவர்களிடம் பகிருங்கள். இதைத் தொடர்ந்து செய்யும்போது தேவன் உங்களுக்காக அந்த இடத்தில் செயல்படுவார். நீங்கள் ஜெபித்து செயல்படுவதை வழக்கமாக்கும் போது தேவன் பிறர் உள்ளங்களைத் திறப்பார். என்ன பேசுவதென்றே தெரியவில்லையே என்கிறீர்களா? பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர் (மத்.10:20) என எழுதியிருக்கிறபடி நீங்கள் ஜெபித்து விட்டு பேசும்போது அவரே உங்களிலிருந்து செயல்படுவார். ஜெபிப்பதை, வேதத்தை வாசித்துப் பின்பற்றி, தேவனைப் பற்றி உபதேசிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். கர்த்தர் செயல்படுவார்.
- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:-
பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்கள் ஆவி, ஆத்துமா, சரீரத்தில் விடுதலையைப் பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள் .
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864