By Village Missionary Movement
Thursday, 06-Nov-2025இன்றைய தியானம்(Tamil) 06.11.2025
நீ தான் வெற்றி பெற்றாய்
"...கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்..." - லூக்கா 3:3
ராஜா ஒருவர் இளைஞர்களுக்கான ஒரு ஓட்டப்பந்தயத்தை நடத்த திட்டமிட்டு, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். பல்வேறு நாட்டைச் சேர்ந்த அநேக வாலிபர்கள் அந்த ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றனர். ஓட்டப்பந்தயம் ஊரின் ஒரு எல்லையில் இருந்து ஆரம்பித்தது. ராஜாவின் அரண்மனை தான் ஓட்டப்பந்தயத்தின் முடிவு எல்லையாக அறிவிக்கப்பட்டது. ஓட்டப்பந்தயத்தின் பாதையில் கற்குவியல்கள் ஆங்காங்கே காணப்பட்டன. அதில் கலந்து கொண்ட அனைவரும் வழியில் கிடந்த கற்குவியல்களை தாண்டியும், அதை சுற்றியும் ஓடினர். சிலர் அதின் மேல் ஏறியும், தாவியும் விரைவாக ராஜாவின் அரண்மனைக்கு ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்தனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஒருவர் மட்டும் வரவில்லை. ஓட்டத்தை துவங்கின அனைவரும் வந்த பிறகு தான் போட்டியின் முடிவை அறிவிப்பேன் என்று ராஜா திட்டவட்டமாக கூறினார்.
நீண்ட நேரத்துக்கு பின் கைகளில் காயங்களுடன் வந்த அந்த வாலிபன் தாமதத்திற்கு மன்னிக்கும்படி வேண்டினான். வரும் வழியில் நிறைய கற்குவியல்கள் இருந்தன, அதன் வழியாக நடந்து வரும் மக்களுக்கு அது இடையூறாக இருக்கும் என அவைகளை அப்புறப்படுத்தினேன். ஒரு குவியலிடையே இந்த தங்க காசுகள் நிறைந்த பையும் இருந்தது என்று அதை ராஜாவிடம் காண்பித்தான். ராஜா மகிழ்ச்சியுடன் மகனே, நீ தான் இந்த ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றாய். நீ மற்றவர்களுக்காக பாதையை சீராக்கினபடியால், இந்த தங்க காசுகள் உனக்கே சொந்தம் என்றார்.
ஆம், எனக்கன்பானவர்களே! நமது அன்றாட வாழ்க்கை ஓட்டத்திலும், நிறையத் தடைகள் வந்து கொண்டே தான் இருக்கும். கஷ்டப்பட்டு அதைத் தாங்கி ஓடுவதற்கு பதிலாக, ஆண்டவரின் ஒத்தாசையை கொண்டு அதை இலகுவாக்கி, மற்றவர்களையும் நன்கு ஓடச் செய்ய வேண்டும். "வாசல்கள் வழியாய்ப் பிரவேசியுங்கள், பிரவேசியுங்கள்; ஜனத்துக்கு வழியைச் செவ்வைப்படுத்துங்கள்; பாதையை உயர்த்துங்கள், உயர்த்துங்கள்; அதிலுள்ள கற்களைப் பொறுக்கிப் போடுங்கள்; ஜனங்களுக்காகக் கொடியை ஏற்றுங்கள்" (ஏசாயா 62 : 10) என்று வேதத்தில் காண்கிறோம்.
அழிந்து கொண்டிருக்கும் மக்களை கிறிஸ்துவண்டை ஈர்க்கும்படி, நம் செயல்கள் அமையட்டும். நல்வழிகளை ஆயத்தப்படுத்துவோம், செம்மைப்படுத்துவோம். தேவ உறவுடனும் ஒத்தாசையுடனும் செயல்பட தேவன் கிருபை செய்வாராக! ஆமென்.
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:-
தெபோராள்கள் சந்திக்கிற கிராமங்கள் கிறிஸ்துவுக்கு சொந்தமாக மாற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864